செல்லமே வாடி செந்தமிழ் தளைப்போம்!
அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன்
உள்ள
நிறைவொடு உணர்வினைத் தூண்டி
தெள்ளத் தெளிவாய்த் தேன்தமிழ் புகட்டி
கள்ள மில்லாக் காதலைப் பெருக்கியே
அள்ளி அணைத்திட அழகே வாடி!
அண்ணலும் நோக்கிட அவளும் நோக்கிய
விண்ணரும் போற்றிய வியத்தகு காதல்
பண்பா டெல்லாம் பறந்தது செல்லம்
கண்ணே வாடி காதலில் திளைப்போம்!
அன்பே எந்தன் ஆருயிர்ச் செல்லமே
இன்பமாய் எந்தனை ஈர்த்திடும் அழகே
துன்பமே மூத்தோர் தொடாமல் நினைந்து
என்னதான் காதலோ? ஏங்கியே தவித்து!
(கனடியக் காதல்...இன்றைய பாணி)
கொட்டிக் குவியுது கட்டிப் பனியது
கட்டி யணையடா காதல் வடுவா!
பட்டதைப் பழையதை பட்டென விட்டுநீ
சிட்டெனக் கொஞ்சடா செந்தமிழ்க் காதலா!
பல்லும் நடுங்குது பாதம் குளிருது
சொல்லும் வராமலே சொண்டுகள் காயுது
வல்லவன் நீயடா வருங்கால் துணையடா
அல்லலைப் போக்கிட அள்ளி அணையடா!
பட்டம் பதவியில் பாரி லுயர்ந்திடு
கெட்டி யிவரென கேட்டு மகிழ்ந்திடு
கட்டுடற் காளைநீ காமுக மின்றியே
கட்டிடும் வரைநீ காதல் பெருக்கடா!
தொட்டு அணைத்திடு தூக்கியும் சென்றிடு!
பட்டுடல் மேனியைப் பார்த்தும் மகிழ்ந்திடு!
மெட்டுடன் பாடிடு மெய்யும் சிலிர்த்திட
கெட்டி மேளமும் கேட்குதே கனவில்ஷ
காதலர் கட்டி அணைப்பது தவறா?
கூதலைப் போக்கிட கூடுதல் குற்றமா?
காத வழித்தொலைக் கண்ணாலே பேசிட
ஆதாம் ஏவாளின் அந்தநாட் காதலா?
இருமன மொன்றா யிணைந்திரு பாலார்
கருத்தொரு மித்துக் கபட மின்றியே
ஒருவரை யொருவர் உளத்தா லிறிகி
வருவதே காதல்! வழுவிலா இன்பமே!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்