தலைநிமிர்ந்து நின்றிடுவாய்

கவிஞர் எம்.ஜெயராமசர்மா, மெல்பேண்

ம்மாவைப் பிடிக்காதார்
       அகிலத்தில் ஆருமுண்டோ
அம்மாவின் அணைப்பினிலே
       அகமகிழ்வார் அனைவருமே
அம்மாவின் பாலோடு
       கலந்ததுவே அன்னைமொழி
ஆதலால் காதலுடன்
       அகம்நிறைப்போம் அன்னைமொழி !

தாய்மொழியைப் பழிப்பாரை
       சந்ததியே மதிக்காது
தாய்கூட அவர்க்கெல்லாம்
       தயைகூடக் காட்டாரே
தாயொதிக்கி நின்றுவிடின்
       தயைபுரிவார் யாருளரோ
தாய்மொழியை புறந்தள்ளி
       வாழ்ந்துவிடல் முறையாமோ !

மொழிகாக்கப் பலபோர்கள்
       முழுவீச்சாய் நடக்கிறது
மொழிக்காக பலபேரும்
       ஈந்தளித்தார் இன்னுயிரை
மொழிவீழின் கலாசாரம்
       முழுவதுமே வீழ்ந்துவிடும்
மொழிதன்னை விழிபோலக்
       காத்திடுவோம் வாருங்கள் !

தாய்மொழியில் பேசுவதைத்
       தலைகுனிவு எனநினைக்கும்
தாழ்வுமனப் பான்மைதனை
       தகர்த்தெறியச் செய்திடுவோம்
தாய்தன்னைப் பழித்திடுவார்
       தரமிழந்தே போயிடுவார்
தாய்மொழியும் தாய்போல
       தானெமக்கு இருக்கிறதே !

அடிபட்ட வுடனேநாம்
       அம்மா வென்றலறுகிறோம்
அன்னைமொழி அகமதிலே
       அமர்ந்தேயே இருக்கிறது
அடிமைத்தனம் அகமுறைவோர்
       அன்னைமொழி தனைவெறுப்பார்
ஆனந்தம் வேண்டுமெனில்
       அன்னைமொழி அரவணைப்போம் !

தாய்மொழியில் பேசிப்பார்
       சந்தோசம் நிறைந்துவிடும்
தாய்மொழியில் எழுதிப்பார்
       சர்வமுமே உனக்குள்வரும்
தாய்மொழியை வாழ்வெல்லாம்
       தாங்கிநின்று நீபாரு
தலைநிமிர்ந்து இவ்வுலகில்
       தான்நீயும் நின்றிடுவாய் !
 

 

உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்