தாய்மொழியில் பேசுவோம்
புலவர் முருகேசு மயில்வாகனன்
தாய்மொழியில்
பேசியே தக்க வைப்போம்
தவறிடிலோ தம்மினமே தானா யழியும்
வாய்ப்பேச்சில் வீரர்களே வாழ்வின் நோக்கம்
வழிவழியாய் வந்தவற்றை வாட்ட மின்றி
தேய்ந்திடாதே காப்பதுவும் தேவைக் கேற்ப
தேர்ந்தறிந்தே செய்வதுதான் சேவை நோக்கம்
நோய்க்கு மருந்துபோல நேசிப்பீர் மொழியை
நெஞ்சில் உரமேற்றி நீடு வாழ்வீர்
தன்னினத்தார் கூடுமிடம் தம்மொழியில் பேசிடுவீர்
தப்புக்கள் ஏதுமில்லை தாயின்றேல் நீயில்லை
அன்னை மொழியில் ஆர்வம் கொள்வீர்
ஐயமின்றிப் பேசிடுவீர் அற்புத மாக
பொன்னான மொழியிருக்கப் போகிறீர் வேறெங்கோ
பொறுப்பாளோ பெற்றவள்தான் பேதையென் றுனராளோ
தன்மானம் காக்கவே தாய்மொழி பேசிடுவீர்
தவறுகள் தானகற்றித் தக்கவராய் வாழ்வீரே.
செந்தமிழைத் தாய்மொழியென் றேற்போர் சிந்திப்பீர்
சேருமிட மொழியோடு தாய்மொழி கற்பீரே
வந்தவரை வாழவைக்கும் வலிமைக் கனடா
வாய்ப்புக்கள் தருகின்றாள் வாய்ப்பாய்த் தானே
இந்நாட்டில் என்னகுறை என்றுமே கற்கலாம்
ஏற்றமுறு செம்மொழியில் என்ன இல்லை
அன்னைத் தமிழை ஆவலுடன் கற்பிப்பீர்
ஐயமின்றிச் சேய்களுக்கும் ஆர்வ மூட்டி.
தாய்மொழியின் வாயிலாகச் சேர்மொழி கற்றே
தாங்குகிறார் பதவிகள் தத்தமக் கேற்பாய்
ஆய்வுக்குத் தேவையான அத்தனையு முண்டே
அன்னைத் தமிழ்மொழியில் ஐயம் வேண்டாம்
தூய்தான மனதுடனே துணைசெய் வோரே
தாய்மொழியாம் செந்தமிழைத் தக்க வைப்பீர்
'பாய்விரித்தேன் கொள்வாரிலை' என்று சொன்ன
பாக்யவான் மனத்துறவி பார்போற்றும் வள்ளலாரே.
தாய்மொழியில் கற்றவர்கள் தலைசி றந்த
தத்துவ ஞானிகளாய்த் தரணி யெங்கும்
தூயமனச் செம்மல்கள் சூழ்ந்து வாழ்ந்தே
தம்மாலி யன்றவற்றைத் தக்க வாறு
மாய்மாலம் ஏதுமின்றி மகிழ்ச்சி யூட்டி
மெய்யாக வாழ்ந்துகாட்டும் வலிமை மிக்க
ஆய்வாளர் மட்டுமல்ல ஐயத்தைப் போக்கும்
ஆற்றலுள்ள வல்லாளர் வலிமை தானே.
உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்