தாய் தந்த மொழி

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
 

ன்னைதன் கருவறையில் என்னைச் சுமக்கஅவள்
அகத்தினொலி கேட்டிருந்தேன் - அதன்
பின்னுமவள் மடிமீது தவழ்ந்துவிளை யாடுகையிற்
பேசும்மொழி கேட்டிருந்தேன்!

பாலூட்டும் போதெலாம் பைந்தமிழின் சாற்றையும்
பருகிடத் தாய்தந்தனள் - அவள்
தாலாட்டுப் பாட்டிலும் தமிழிலே இசைகூட்டித்
தாய்மொழி யெனத்தந்தனள்

பள்ளியிற் கல்விக்கும் பருவத்தின் செயலுக்கும்
பக்திக்கும் மொழியானது – தமிழ்
உள்ளத்திற் பாய்கின்ற உணர்ச்சிகள் கவிதையென
உருவாக வழியானது!

கோயிலில் இருப்பது கல்லல்லத் தொழுகின்ற
கடவுளா மென்பதறிவோம் - நம்
வாயிலே பிறப்பது சொல்லல்லத் தாய்தந்த
வேதமா மென்பதுணர்வோம்!

வளம்பெற்ற மொழியினது வாரிசுக ளாகிநாம்
வரம்பெற்ற குடிகளானோம் - பகைக்
களம்வென்று கடலோடு கனல்தின்ற ஊழ்வென்று
காற்றாடும் கொடிகளானோம்!

வாயின்மொழி மட்டுமோ வாழும்மொழி யானதமிழ்
வாழ்க்கையின் கூறானது – பெற்ற
தாயினுக் கிணையாகத் தாய்மொழியைப் போற்றுதல்
தனையற்குக் கடனானது!

காலங்கள் யாவுமென் வாழ்வொடு ஒன்றியே
களிப்பூட்டும் அன்னைமொழியே! - இந்த
ஞாலத்தில் மனிதகுலம் வாழ்கின்ற நாள்வரையும்
நனிதோங்கி வாழ்கதமிழே!
 


 

 


உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்