உலகத்
தாய்மொழி
அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன்
நேரிசை
வெண்பா
எத்திசையும்
ஓங்குதுபார் இன்பத் தமிழோசை
சித்தமொடு செந்தமிழன் சேவையினால் - வித்தகராய்
எம்மக்கள் எந்நாட்டும் ஏற்றமொடு வாழ்பயனாய்
சிம்மாசனம் பெற்றதே சீர்
பெற்றதன் தாய்போலப் பேணியே காக்கின்றான்
உற்றதன் தாய்மொழியை ஊர்விட்டும் – கற்றவரும்
மற்றவரும் தாம்வாழும் மண்ணிலெங்கும் எம்மொழியை
பற்றுடனே போற்றுகின்றார் பார்!
தனைக்காத்துத் தன்னுறவு காத்துத் தனது
மனையொடு வாகனமும் வற்றா - வினைத்திறத்தால்
இம்மண் மகிழ்ந்தேத்த ஈடில் உழைப்பாலே
செம்மொழியும் காத்தான் செறிந்து.
பைந்தமிழன் பண்பாடு பாரறியச் செய்தின்று
சிந்துகின்றார் பாபலவும் செந்தமிழில் - முந்துதுபார்
வாய்ப்பாட்டும் மத்தளமும் வண்தமிழன் நாட்டியமும்
தாய்நாட்டி லில்லாச் சிறப்பு!
முத்தமிழும் பண்பாடும் முன்னின்று காத்துமே
சித்தம் குளிர்ந்திடவே சீராக- எத்திசையும்
ஏற்றமொடு காணும் எளிலாம் அரங்கங்கள்
சாற்றுதுபார் செந்தமிழின் சீர்!
உள்ளச் சுமையொடு ஊர்விட்டு வந்தானெம்
தெள்ளு தமிழ்பேசும் தீந்தமிழன்- கள்ளமின்றிக்
கண்ண யராதுழைத்துக் கண்ணிய வாழ்வுதனை
எண்ணம்போல் வாழ்கின்றான் ஏற்று!
பாரினிலே எங்கில்லை பைந்தமிழும் பண்பாடும் ?
சாரீரம் ஓங்கியெங்கும் சங்கீதம் - பேரிசையில்
வெள்ளை இனத்தவரும் வேட்டிகட்டி ஆடுகின்றார்
கொள்ளை அழகென்று கொள்!
உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்