சாலையோர செல்லாக்காசாய்....
இ.பா.சிந்தன்
வேலைதனை முடித்துவிட்டு
வீடுநோக்கி நடந்தேன்!
வீடிருக்கும் தெருநுழைந்தால்,
வாய்விட்டு படிக்குமென்
மகன்குரலை கேட்கலானேன்!
'வீடு என்றால் என்ன?
வீடு என்பது
வெயிலும் மழையும்
வாட்டாமல் இருக்க
மிருகங்கள் வந்து
மிரட்டாமல் இருக்க
மனிதன் உருவாக்கிய
பாதுகாப்பு வளையமே
வீடு ஆகும்!'
மகன் படித்த பாடம்
மனதில் நினைத்தே
மகனருகே சென்றேன்!
தலையை கோதிவிட்டு
திரும்பிய புறத்தில்
சுவற்றில் சிரித்தார்
சித்திவிநாயகர்!
தந்தையின் பரிசாய்
துணையிருக்கும் நண்பன்!
தந்தையை நினைக்கையில்
துரத்துவது அவரின்
நிறைவேறாக்கனவே!
சொந்தமாய் ஓர் குடிசை!
மூன்றுபுறம் மறைக்க,
வாசலாய் கதவிருக்க,
வீடொன்று வேண்டுமென
வாழ்வெல்லாம் வேண்டினாரே!
கலங்கிய கண்களை
கைகளால் துடைத்தேன்!
நாட்களும்
நகர்ந்தன!
சிறுது சிறிதாய்
சேர்த்த பணம்!
சிலகட்டு ஓலைகளை
சில்லறையாய் வாங்கினேனே!
வாங்கிவந்த ஓலைகளும்
வீதியில்கிடைத்த கம்புகளும்
நெடுஞ்சாலை ஓரத்திலே
நல்லதோர்(!) வீடாயின்று
நிமிர்ந்துபார்க்க வைத்தேனே!
தந்தைகூட மகிழ்ந்திருப்பார்
தவறாமல் இருந்திருந்தால்!
ஓலைக்கதவினை
ஓராயிரம் முறையாய்
மூடியும் திறந்தும்
மகிழ்ந்தாளே என்மனைவி!
'வீட்டுக்குள் நின்று
வானத்தை பார்த்தேன்!
வெயிலே அடிக்கல!'
மகனின் வார்த்தையில்
மகிழ்ச்சியின் உச்சங்கள்!
மேனியின் குளிர்நீங்க
சினிமாவின் போஸ்டர்களை
இனிமேலும் போர்த்தவேண்டாம்!
நள்ளிரவில் எமைதுரத்தும்
நாய்களின் தொல்லைகண்டு
நாமஞ்சி நடுங்கவேண்டாம்!
வழிப்போக்கர் கண்களது
விழிப்பார்வை எண்ணிநாமும்
விழிபிதுங்கிப்போகவேண்டாம்!
சொல்லொனா இன்பத்திலே
சொர்கபுரி வீட்டினிலே
சாய்ந்தே உறங்கினோமே!
விழித்தெழுந்து பார்க்கையிலே
வீட்டைசுற்றி எந்திரங்கள்!
இடிக்கவந்த புல்டோசர்கள்,
ஈரமில்லா மனிதர்கள்
இரண்டுமெனக்கு எந்திரம்தான்!
அழித்தொழிப்பு முடிந்தபின்னர்
அருகாமையில் வந்து
அறிவித்த ஒலிப்பெருக்கி!
' ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றம்'
மகன் படித்த பாடம்
மீண்டும் வந்ததே நினைவில்!
'வீடு என்றால் என்ன?
வீடு என்பது................'
அழுகையை மறைத்து
அடுத்த சாலை தேடி
அனைவரும் நகர்ந்தோம்
ஆக்கிரமிப்பாளர் பட்டத்தோடு
chinthanep@gmail.com
|