தாய் மொழி
போற்றுதும்!
கவிஞர் அனலை.ஆ.இராசேந்திரம்
(அகவற்பா)
உலகத்
தீரே! உலகத் தீரே!
தாய்மொழி போற்றுதும் தாய்மொழி போற்றுதும்
காய்கதிர்ச் செல்வன் கனன்றிடும் வான
முகடுறு வையக் குடிற்கண் வைகும்
உலகத் தீரே உலகத் தீரே
விரித்தகண் உயர்த்தி வியந்துநாம் நிற்க
வரிசையில் மிதந்து வான்வெளி ஏகும்
பல்வே றினத்துப் பறவைகள் பாரீர்
தத்தம் மொழிகளிற் தகுவன பேசி
முத்தெனும் இன்னிசை முறையுறச் சிந்தி
பன்னிறச் சிறகை அசைத்துப் பாங்குற
ஒன்றாய்ப் பறக்கும் ஒழுகல் பாரீர்
மொழிகலை இனநெறி மேன்மையைப் போற்றி
ஒளிவிளக் கெனநமக் கவைவழி காட்டும்
சேயெனப் பிறந்தோர் தாயினைப் போற்றல்
ஆயவோர் கடனென அறிவீர் ஆதலின்
கருவாய் வயிற்றிற் கிடந்த காலையிற்
திருவாய்ப் பொருந்திய தாய்மொழி போற்றுதும்
தமிழினத் தீரே! தமிழினத் தீரே!
அமிழ்தின் இனிய தமிழ்நம் உயிராம்
ஆதலின்,
(கட்டளைக் கலித்துறை)
முன்னைப் பிறந்தும் முதிரா இளநலப் பொற்கொடியைக்
கன்னற் கரும்பின் சுவைமிகு கற்பகச் செல்வியினை
அன்னை எனநம் முனைவினைப் பேறாய் அமர்ந்தவளை
பொன்னினும் மேலாம் செழுந்தமிழ்த் தாய்கழல் போற்றுவமே!
சந்தத் தருவார் பொதியிற் பிறந்து பெரும்புலவோர்
அந்தமி லின்பப் பனுவற் தொடைபல வாயிரங்கள்
சிந்துர மேனி முழுதும் சிறப்புறக் கொண்டவளை
செந்தமிழ்த் தாயெனும் சீரார் அனங்கினைப் போற்றுவமே!
விண்ணில் எழுந்து வியன்முகம் காட்டும் நிறைமதிபோல்
கண்ணுத லானருட் பேறாய் விளைந்த கனிபமுதை
எண்ணிட எண்ணிடத் தேனினும் மேலாய் இனிப்பவளை
தண்ணார் தமிழெனும் தாயினைப் போற்றிப் பரவுவமே!
உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்