நெஞ்சிலே இட்ட நெருப்பு!
கவிஞர் மாவிலி மைந்தன்
சி.சண்முகராஜா
இந்தக்
கிழமை இணையத்தில் ஏற்றுதற்கு
எந்தத் தலைப்புநன் கேற்றதென்றே – சிந்திக்க
அஞ்சற்க என்றே அகில்தந்தார் அத்தலைப்போ
நெஞ்சிலே இட்ட நெருப்பு!
அன்பை விதைத்தால் அறுவடையும் அன்பாகும்
அன்பே அகிலத்தை ஆட்சிசெய்யும் - அன்பின்றி
வஞ்சனையை நெஞ்சில் வரித்தால் அதுவேநம்
நெஞ்சிலே இட்ட நெருப்பு!
அழுக்காறு பேரவா ஆணவமிம் மூன்றும்
புழுக்கூடக் கொள்ளாதம் வாழ்வில் - இழுக்கான
புன்செயலே செய்து புகழீட்ட வேண்டிலதே
நெஞ்சிலே இட்ட நெருப்பு!
கள்ளமற்ற நெஞ்சோடு காலமெலாம் காப்பரென்று
பிள்ளைபெற்றோ ரென்றுமெதிர் பார்த்திருப்பர்; - பிள்ளைகளோ
நஞ்சாகிப் போனாலே நாதியற்ற பெற்றோர்க்கு
நெஞ்சிலே இட்ட நெருப்பு!
வண்ணக் கனவோடு வாழ்க்கைத் துணையோடு
எண்ணம் கலந்திணைந்;தால் இன்புறலாம் - கண்மறைக்கக்
கொஞ்சம் மனவிரிசற் கோடுவிழுந் தாலதுவே
நெஞ்சிலே இட்ட நெருப்பு!
சுற்றங்கள் சூழும் சுகமே இறைவனிடம்
பெற்றவர மென்றதனைப் பேணிடுவோம் - முற்றுமது
மிஞ்சும் பெருஞ்சுமையாய் மீறிவிட்டாற் காலமெலாம்
நெஞ்சிலே இட்ட நெருப்பு!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்