நெஞ்சிலே இட்ட நெருப்பு

கவிஞர் இனியன், கரூர்
 



மெரிக்க நாடே அதிரும் வகையில்
விமர்சனம் செய்தனர் விந்தைப் படுகொலை!
நஞ்சு மனத்தவன் நஞ்சென மக்கள்தம்
நெஞ்சிலே இட்ட நெருப்பு.

சுட்டிக் குழந்தைகள் சூழ்ந்ததோர் பள்ளியில்
துட்டன் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலே
கொஞ்சமோ சோகம்! கொலைகாரன் பெற்றவர்
நெஞ்சிலே இட்ட நெருப்பு.

படித்திடச் சென்றோர் துடித்திட மாய்ந்தார்
முடித்திடச் சென்றான் விடுத்தனன் குண்டுகள்
நெஞ்சு வெடித்து நெடுமரம் ஆனவர்தம்
நெஞ்சிலே இட்ட நெருப்பு.

பார்க்லேண்ட் பள்ளியில் பதினேழு பேர்களை
யார்க்கும் தெரியாமல் பார்த்தவன் கொன்றது
பிஞ்சிலே காய்களைப் பிய்த்தது போன்ம்அது
நெஞ்சிலே இட்ட நெருப்பு

வன்முறை என்ப வழிமுறை அல்லவாம்
என்பதைப் போற்றுவம்; எங்குமே வன்செயல்
கொஞ்சமும் ஆகாது எஞ்சா தொழிகநம்
நெஞ்சிலே இட்ட நெருப்பு.


குறிப்பு: 14.2.2018 அன்று அமெரிக்க நாட்டில் ஒரு பள்ளியில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. அது ஏற்படுத்திய தாக்கத்தில் உருவான கவிதை இது.
 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்