பெண்ணின் பெருமை
கவிஞர் இனியன், கரூர்
இறைவன் படைப்பில்
இணையிலா ஒன்று
குறைகள் களைந்து நிறைகாணும் என்று
நிறைமொழி மாந்தர் அறைந்தனர் நன்று
பிறைநுதல் கொண்டநற் பெண்.
கருவைச் சுமக்கும் கடமை மகவின்
உருவைச் சமைக்கும் உழைப்பு –பெருகும்
திருவென கல்வி தருவாள் பரிசாய்
வரும்பல துன்ப வடு.
எங்கோ பிறந்தவள் எங்கோ நுழைந்தவள்
அங்கே கணவர் அனைவரும் போற்றிட
ஓங்கி உயர்ந்தே ஒருமை மகளெனத்
தாங்கி மகிழும் தரு.
தன்னவன் போற்றிடத் தன்னைச் செதுக்குவாள்
முன்னவன் போக முயற்சிகள் செய்பவள்
என்னவன் என்னவன் என்றவள் சொல்வதில்
கன்னலாய் நிற்பாள் கனிந்து.
இல்லம் அனைத்தும் இறைவன் இருப்பிடம்
நல்லன எல்லாம் நடந்திடும் இல்லில்
இறைவன் வடிவில் எழுந்தருள் செய்வாள்
உறைவாள் உளத்தில் உவந்து.
பவளப் பரலோ! பசுமை மணியோ!
குவளை மலரோ! குவியும் அணியோ!
தவழும் தளிரோ! தமிழென வாழ்வாள்
அவளது பேர்இனி அன்பு.
சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்