மங்கையர் தினம்

கவிஞர் கந்தஸ்ரீ பஞ்சநாதன்

ங்கையர் உள்ளம் மங்காத செல்வம்
       மண்ணில் வாழும் மானிடத் தெய்வங்கள்
கங்கை ஆறாய் தூய்மையாய் ஆக்கி
       கரையில் சேர்க்கும் கலங்கரை விளங்கங்கள்
எங்கள் வாழ்வில் துயரங்கள் வந்திடின்
      ஏங்கித் தவிர்த்து ஆற்றும் உள்ளங்கள்
பங்கம் நேரினும் சோர்ந்து விடாது
      பக்குவ மாகவே தீர்க்கும் தியாகியரே

அன்பை வளர்க்கும் பெருமை கொண்டோர்
       அறிவை ஊட்டிய முதற்குரு அம்மையே
துன்பம் மலையாய் நேரினும் என்றும்
       துவண்டு விடாது களையும் தூயவர்
இன்பம் எமக்கு அளித்து இடரினை
       இயல்பாய் தாங்கும் இன்னுயிர் பெண்மையே
தன்னலம் மறந்து குடும்பமே கதியாய்
       தரணியில் வாழும் எமது ஆத்தாவே

ஆதவ னாகவே அன்பைக் காட்டி
       அன்புதான் சாலச் சிறந்தது உலகிலென்றாய்
ஆதலால் முன்னோர் பெண்கள் பெயரினை
      ஆறுதெய் வம்நில திற்குச் சூட்டினரே
மாதா வின்மனம் பொறுமை ஒழுக்கம்
       மன்னிக் கும்செயல் அணிகலங் கள்யாகும்
நாதத் தலைவன் இறைவனும் அர்த்த
      நாரீ சரராய் இடதுபாகம் கொடுத்தாரே

பெண்மை தாயாய் தமக்கையாய் தங்கையாய்
      பாட்டியாய் மனைவியாய் வாழும் திருமகள்
உண்மையில் மாதவ வினையால் இறைவனார்
      உன்னதப் பிறவி மங்கையாய்ப் படைத்தார்
திண்மைக் கற்பாய் அறத்தால் வாழ்க்கையை
      திடமாய் நடத்தும் தெய்வப் பிறவிகள்
மண்ணில் குடும்பம் வெற்றிவா கைசூடிட
      மனமாய் உழைத்த மங்கையர் திலகங்கள்

அன்று உங்கள் குடும்பத் தலைவன்
      அடுப்பங் கரையில் அமர்த்தி விட்டாரே
இன்று ஆயுதம் ஏந்தித் தாயகம்
      இனிது காத்த வீரப் பெண்மணிகள்
வன்மை ஒழிந்து நீதி நிலைத்து
      வளர்க அன்பே தெய்வம் என்பதே
நன்று உணர்வீர் பெண்மையின் மேன்மையினை
      நானிலம் போற்றிட உலகம் செழித்திடுமே

 



சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்