மகளிர் நாள்
கவிஞர்
சபா.அருள்சுப்பிரமணியம்
அரிவையர்
கென்று ஐ.நா.வால்
ஆக்கி அளித்த இந்நாளில்
சரிநிகர் வாய்ப்புகள் தந்தவர்கள்
சாதனை படைக்கத் துணைநிற்போம்!
உரிமைகள் பெற்ற இனமாக
உலகம் முழுதும் வாழ்பெண்கள்
பெருமைகள் சேர்த்து வாழுதற்குப்
பின்னின் றுதவி ஊக்கிடுவோம்!!
ஆற்றல் காட்டி உலகத்தில்
ஆண்கள் போற்றும் செயலாற்றி
ஏற்றம் கண்டு அடுத்தவரும்
இணைந்து பாரில் உயர்வதற்கும்
மாற்றம் காண வைப்பதற்கும்
மகளிர் ஆற்றும் பணியதனைப்
போற்றி மகளிர் நாளிதிலே
பூவையர்க் காசி கூறிடுவோம்!
மென்மை யானவள் பெண்னென்போம்
மேன்மை யானவள் பெண்ணென்போம்
அன்னை யாபவள் பெண்ணென்போம்
அன்பிற் குரியவள் பெண்ணென்போம்
கன்னல் மொழியாள் பெண்ணென்போம்
காதற் கிளியாள் பெண்ணென்போம்
மண்ணை ஆள்பவள் பெண்ணென்போம்
மதிப்பிற் குரியவள் பெண்ணென்போம்
இன்ன சிறப்புகள் உள்ளவளை
எப்படி உலகம் பார்க்கிறது...?
என்ன வாயாற் சொன்னாலும்
எத்தனை செயலாய் மலர்கிறது...?
சின்னப் பெண்கள் திருமணத்தை
சிதைத்து அழிக்கும் பெண்குலத்தை
இன்னும் உலகிற் காண்கின்றோம்!
எல்லாம் பேச்சுடன் போச்சையா!!
பாலியத் திருமணம் மாறவில்லை!
படிப்பும் பொதுவாய் ஆகவில்லை!!
வாலிபர், விருத்தர், பெண்களையோர்
வகையிற் போதைப் பொருளாக்கும்
காரியம் தொடர்ந்தே செல்கிறது
காத்திட மகளிர் நாளிதிலே
வீரிய மாக மனிதகுலம்
விருப்புடன் சபதம் செய்திடுமா???
நாணால் ஆணைக் கவர்ந்தவளே
நாட்கள் ஆகக் குடும்பத்தின்
பேணாய் மாறித் தாங்கிநின்றாள்
பின்னர் தங்கள் வலுவுணர்ந்து
தூணாய் மாறி உலகியங்கத்
துணையாய் நின்றாள், பெண்ணிவளை
ஆணா திக்கம் பேசிடுவோர்
அன்பாய் அணைத்துச் செல்வாரோ?
பெண்ணைத் தெய்வம் ஆக்கிவிட்டுப்
பேசா திருக்கும் கதைமாறி
விண்ணைத் தொடும்விஞ் ஞானத்தில்
விரும்பி மக்கள் மனம்கவர்ந்து
மண்ணை ஆளும் திறன்பெற்று
மலைபோல் நிமிர்ந்து நிற்கின்ற
பெண்ணை இன்று காண்கின்றோம்
பெருமை கொள்வோம் அதுகண்டு!
மேலை நாட்டிற் பெண்களினம்
மேன்மை யோடு வாழுதல்போற்
கீழை நாட்டிலும் பெண்களினம்
கெட்டித் தனத்தை வெளிக்காட்டிக்
காலைக் பதித்து முன்னேறக்
கைகொடுக் கின்ற குமுகாயம்
நாளை மலரும் எனநம்பி
நாங்கள் உறுதி பூண்டிடுவோம்!
சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்