மகளிர் நாள்
பாவலர் கருமலைத்தமிழாழன்
கண்களெனப்
பேசுகின்ற பெண்கள் தம்மைக்
கண்ணாகப் பேணுதற்கே மகளிர் நாளாம்
பெண்களினை மதிப்புடனே போற்றி நல்ல
பெருமையினைச் சேர்ப்பதற்கே மகளிர் நாளாம்
மண்தன்னைத் தாயாக வணங்கல் போல
மகளிரினை வணங்குதற்கே மகளிர் நாளாம்
உண்மையான சமத்துவத்தை உரிமை தன்னை
உவந்தளிக்க வந்ததுதான் மகளிர் நாளாம்!
உயர்கல்வி பெண்களெல்லாம் பெறுவ தற்கே
உறுதியினை ஏற்பதற்கே மகளிர் நாளாம்
முயற்சிசெய்து முன்னேறும் பெண்க ளுக்கு
முன்நின்று உதவுதற்கே மகளிர் நாளாம்
தயக்கமின்றித் துறையனைத்தும் ஆட்சி செய்ய
தடைகளினைத் தகர்ப்பதற்கே மகளிர் நாளாம்
மயக்கத்தை மலைப்புதனை அகற்றி எங்கும்
மகளிரினை உயர்த்துதற்கே மகளிர் நாளாம் !
நுகர்பொருளாய்ப் பெண்களினை நினைக்கும் கீழ்மை
நினைவுகளை நீக்குதற்கே மகளிர் நாளாம்
மகளாக தாயாக தமக்கை யாக
மனத்தினிலே நினைப்பதற்கே மகளிர் நாளாம்
தகவாகப் பெண்களுக்குத் துணையாய் நின்று
தலைநிமிரச் செய்வதற்கே மகளிர் நாளாம்
மகத்தான சாதனைகள் புரிவ தற்கே
மனமுவந்து வாழ்த்துதற்கே மகளிர் நாளாம் !
சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்