பெண்ணுலகம்
கவிஞர் மாவிலி மைந்தன்
சி.சண்முகராஜா
இன்னுலகை
இயற்கையினை இறையருளின் சக்தியினை
இனிய தாயாய்ச்
சென்னியிலே வைத்தேற்றிச் சீராட்டும் ஆடவர்கள்
சிறுமை கொண்டு
வன்முறையால் ஆதிக்க வலையிட்டு மெல்லியரை
வதைத்தல் இன்றும்
துன்பியலாய் முடிவற்ற தொடர்கதையாய்ப் போவதுவே
துயர மன்றோ!
பட்டங்கள் பெற்றென்ன சட்டங்கள் செய்தென்னப்
பதவி கொண்டு
திட்டங்கள் வகுத்தென்ன திறனாற்றல் வளர்த்தென்னத்
தீயோர் செய்யும்
கொட்டங்கள் அறுத்தென்ன கொடிகட்டி உயர்ந்தென்னக்
குடும்ப மென்னும்
வட்டத்துள் மங்கையர்தம் வாய்பொத்தி; அடிமையென
வாழ்கின் றாரே!
பெண்ணாகப் பிறக்கவொரு பெருந்தவமே வேண்டுமென்பர்
பெண்கள் தங்கள்
கண்ணுக்கும் காமத்தின் இச்சைக்கும் விருந்தென்றே
கருதும் ஆண்கள்
மண்ணுலகம் வளம்பெற்று மானுடமே செழிப்புற்று
மலரச் செய்த
பெண்ணுலகம் வாழ்ந்தாலே பேருலகம் நிலைக்குமெனப்
புரிதல் வேண்டும்!
சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்