தமிழ் மாதர் நிலையும் நினைவும்

கவிஞர் அனலை.ஆ.இராசேந்திரம்

'போர்க்களத்தில் மகன்மாற்றார் தீரம் கண்டு
        பேடியென முதுகிட்டான்' உண்மை யாயின்
சீர்சாலும் வீரப்பால் சுரந்த என்றன்
        சிற்பமுலை அரிவாளுக் கிரைதா னென்று
நேராகக் களம்சென்று மைந்தன் மார்பில்
        நோவுற்று வீழ்ந்தனைக் கண்ட போது
கார்கண்ட மயிலானாள் தமிழ்மா தோர்தி
        கவிதைசொலும் சரிதை இதை அறிவோம் நாமே!

எழுதுகின்ற போதெல்லாம் எழுச்சி பொங்கும்
        எம்நெஞ்சம் அவர்க்காகக் காலம் தோறும்
அழுதழுது நீர்வடிக்கும், இளமை காட்டும்
       இன்பநலம் உயிர்யாவும் ஈழ மண்ணில்
அழிந்தொழியும் நிலையிருந்த தமிழர்க் காக
      ஆகுதியாய் களநிலத்தே ஈந்தார் தம்மை
உளமார மைந்தர்காள் வெல்வீர் என்றே
      விடையீந்தார் தமிழ்மாதர் கண்முன் கண்டோம்

கள்வனா கண்வன்எனக் கதறிக் கேட்டாள்
       கதிர்ச்செல்வன் இல்லையென விடையும் சொன்னான்
துள்ளிவரும் காளியென மன்றம் சென்றாள்
       தூயவனே கணவன்என விளக்கம் செய்தாள்
விள்ளரிய பெருநீதி பிழைத்த தாலே
       விண்ணுலகம் சென்றான்பாண் டியனும் ஆங்கே
தெள்ளுதமிழ் மதுரைநகர் அழித்த அந்தத்
       தெய்வீகக் கண்ணகியாள் வாழ்ந்தாள் கண்டோம்

அறம்வளர்த்தாள் தமிழ்ப்பாட்டி அவ்வை என்பாள்
       அன்புநெறி நின்றாள்கா ரைக்கா லம்மை
திறன்மிகுந்த சமணத்தை எதிர்த்து நாட்டில்
       சைவநெறி காத்தாள்தண் டமிழார் செல்வி
மறமன்னன் பாண்டியனின் மனையாள் வீர
       மங்கையவள் மங்கையர்குள் அரசி போலும்
நிறைமாதர் பலர்வாழ்ந்த நிலத்தில் இன்று
       நிலைஎன்ன தமிழ்மாதர்? நினைத்துப் பார்ப்போம்


 


சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்