நெஞ்சிலே
இட்டார் நெருப்பு
கவிஞர் கு.கணேசன்
வஞ்சியவள்
என்செய்வாள் வஞ்சகற்கு அஞ்சியவள்
பஞ்சமோ பஞ்சமென்றே பாலருக்காய்க்---கெஞ்சியவள்
கஞ்சிக்கும் காசின்றிக் கண்ணீரில் துஞ்சினாளே
நெஞ்சிலே இட்டார் நெருப்பு!
வஞ்சகற்கு வந்தவாழ்வால் வன்கொடுமை செய்திறாரே!;
கஞ்சியின்றி துஞ்சுவோரைக் காண்பதில்லை--பஞ்சத்தால்
துஞ்சி மடிவோரைத் தூக்கிவிடும் நோக்கமின்றி
நெஞ்சிலே இட்டார் நெருப்பு!
வஞ்சகம் செய்வோற்கு வாரி வளங்கிடுவார்
கெஞ்சி அழுவோற்குக் கேடுசெய்யும்--வஞ்சகர்கள்
பஞ்சம் பசியதனைப் பாராது பாமரரின்
நெஞ்சிலே இட்டார் நெருப்பு!
கொஞ்சிக் குலாவிடுவார் குள்ளநரி போலிருப்பார்
தஞ்சம்; தருவார் தருணத்தில்--நஞ்சிடுவார்
வஞ்சப் புகழுரைப்பார் வம்புத் தனம்செய்தே
நெஞ்சிலே இட்டார் நெருப்பு
குண்டு மழைபொழிந்து கொன்று குவித்தாரே
கண்டு இடம்பெயர்ந்து கண்டதெலாம்—உண்டோமே
அஞ்சி அழுதழுது ஆற்றாது கெஞ்சிடவே
நெஞ்சிலே இட்டார் நெருப்பு!
சோதரர் நாடென்று சொல்லி மகிழ்ந்தோமே
ஆதரவு கிட்டுமென்று அன்புவைத்தோம்--சோதரர்மேல்
தஞ்சமென்று நின்றோமே தாய்மடியாய் நாம்நினைத்தே!
நெஞ்சிலே இட்டார் நெருப்பு!
நெஞ்சை நெகிழவைக்கும் நீதியற்ற காதையிது
கொஞ்சி மகிழும் குழந்தைகளே—தஞ்சமென
வஞ்சிக் கொடியிடையாள் வாழ்ந்து வரும்போது
நெஞ்சிலே இட்டார் நெருப்பு!
பஞ்சம்வந் துற்றபோதும் பாலகரைத் தாங்கிநின்றாள்
தஞ்சமெனத் தான்வளர்த்தாள் தாங்கொணாச்---சஞ்சலத்தால்
வஞ்சியவள் பங்கருக்குள் வாரிஅணைத் தாளவரை
நெஞ்சிலே இட்டார் நெருப்பு!
சொல்லவும் ஆற்றாது சொல்லியழ வார்த்தையில்லை
அல்லலுற்றார் சாமடியில் அல்லோலம்---கல்லோலம்
அஞ்சியஞ்சி ஓடினார்கள் ஆர்தயவும் கிட்டவில்லை
நெஞ்சிலே இட்டார் நெருப்பு!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்