கோவலர்வாய் வைத்த குழல்

கவிஞர் இனியன், கரூர்



யாவரும் மண்ணிலே யாழிசை என்றிட
மேவன செய்திங்கு மேதினி வாழ்ந்திட
ஆவன செய்யும்நல் ஆன்றோர் பெருகுதல்
கோவலர்வாய் வைத்த குழல்.

காவலர் என்பவர் கையூட் டிலாமல்ஓர்
ஏவலர் என்றே எழிலாய் உயர்ந்தவர்
பாவலர்வாய் போற்றும் படியவர் வாழ்வதே
கோவலர்வாய் வைத்த குழல்.

தமிழர்தம் வீட்டில் தவழும் குழவி
அமிழ்தத் தமிழில் அதன்பெயர் இல்லைஇக்
கேவலம் தீர்ந்ததென கேள்வியுறும் நாள்நமக்குக்
கோவலர்வாய் வைத்த குழல்.

கங்கையைக் கொண்டு கடாரமும் கொண்டதை
எங்கணும் பேசுவதால் ஏற்படா நன்மைகள்
நாவலிக்கப் பேசாமல் நற்சா தனைசெய்தல்
கோவலர்வாய் வைத்த குழல்.

ஈவன ஈயா இனிமையும் தந்திடா
ஆவன செய்யா அவற்றை ஒதுக்குக
நாவலர் நல்கிய நன்னூலை நாடலே
கோவலர்வாய் வைத்த குழல்.




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்