கோவலர்வாய் வைத்த குழல்

புலவர் முருகேசு மயில்வாகனன்



ன்னிசை யாளர் இனிமையாய்ப் பாடிட
இன்பம் அளிக்கும் இசைதானே – அன்னவர்க்கு
பாவளிக்கும் பாவலரின் ஆக்கங்கள் தந்திடுமே
கோவலர்வாய் வைத்த குழல்.

ஈழத்தில் இன்று இனவழிப்பின் கால்கோளால்
வாழ்விடங்கள் தீயினால் வெந்தழியக் - காழ்ப்புணர்வே
காவலர் பாராமுகம் காட்டுவதும் காரணமே?
கோவலர்வாய் வைத்த குழல்.

மக்கள் பணிக்காய் மனநிறைவாய் வந்தவர்கள்
சிக்கலுக் குள்ளாவார் சீக்கிரமே – பக்குவமாய்ச்
சேவைசெய்தே நற்றலைவர் என்றபெயர் தாங்குபவர்
கோவலர்வாய் வைத்த குழல்.

செய்யும் தொழில்களைச் சீதூக்கிப் பார்த்ததனை
வையம் புகழ்கின்ற வாறுதான் – தொய்வில்லா
ஆவளர்ப்போர் காணுமின்பம் ஐயமிலா ஆனந்தம்
கோவலர்வாய் வைத்த குழல்.

ஊனமுற்ற மக்கள் உளநிலையால் பாதிப்பே
ஆனதோர் அன்பில்லை ஆதலால் - ஈனமின்றித்
தாவிவரும் இன்பத்தைத் தாயன்பு காத்தாலே
கோவலர்வாய் வைத்த குழல்.

கைலஞ்சம் வாங்குவோர்க்கு காலமெலாம் சஞ்சலமே
சீலமுள்ளோர் வாங்காரே சிந்தித்து – காலத்தே
தேவபணி என்றேதான் தம்பணியைச் செய்வது
கோவலர்வாய் வைத்த குழல்.

போட்டி பொறாமையுடன் பொல்லாங்கு கொண்டவர்கள்
நாட்டின் தலைவர்களாய்; நாடாள – வாட்டமின்றித்
தாவிவந்து தொல்லைதரும் ஆட்சியினைச் செய்வோர்கள்
கோவலர்வாய் வைத்த குழல்.

பிறப்பெடுத்த ஆன்மா பெருமைபெற வாழ்ந்து
அறங்காத்து அல்லல் அழிய - இறைநாடி
தேவன் திருவடியே தஞ்சமெனக் கொண்டிட்டால்
கோவலர்வாய் வைத்த குழல்.

மக்களின் சேவை மகேசனது சேவையெனத்
தக்கவழி வாழ்வோர்க்கு தண்ணழியான் - பக்கபலம்
நாவசைத்து நல்லவற்றைப் பேசுகின்ற பண்புடையார்
கோவலர்வாய் வைத்த குழல்.






 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்