சொர்க்கமாய்
இருக்குமன்றோ !
கவிஞர்
எம்.ஜெயராமசர்மா, மெல்பேண்
நிலவுலகில்
நாம்வாழ நிம்மதிதான் முக்கியமே
தலைகனத்து வாழ்ந்துவிடின் நிலையிழந்து
போய்விடுவோம்
விலையில்லா அன்பினைநாம் விலைபேசி நிற்கின்றோம்
நலமிழக்கும் வழிநாடி நாம்போதல் முறையன்றோ
உலகினிலே வாழுதற்கு உயர்வழிகள் பலவிருக்கு
அதைத்தொலைத்து விட்டுவிடின் அமைந்துவிடா நல்வாழ்வு
நிலையுணர்ந்து செயற்பட்டால் நிம்மதியாய் வாழ்ந்திடலாம்
எனும்நினைப்பை மனமிருத்தி எல்லோரும் இயங்கிடுவோம் !
பண்பாடு கலாசாரம் பலவாறு இருந்தாலும்
மண்மீது வாழுதற்கு மனம்சிறத்தல் வேண்டுமன்றோ
கண்ணான ஒழுக்கமதை கருத்தினிலே இருத்தாமல்
எண்ணமதைச் சிதறவிடல் எவருக்கும் ஏற்றதன்று
உண்ணாமல் உறங்காமல் ஓய்வின்றி உழைத்துழைத்து
உபகாரம் செய்வதனை உளமிருத்த மறந்துவிட்டோம்
எண்ணமதில் என்னாளும் இரக்ககுணம் இருத்திவிடல்
இவ்வுலக வாழ்வினிலே எல்லோர்க்கும் தேவையன்றோ !
எத்தனைதான் நிறமிருந்தும் எண்ணமெலாம் ஒருநிறமே
என்கின்ற உயர்கருத்து எல்லோர்க்கும்
வரவேண்டும்
சத்தியத்தை மனமிருத்தி சமத்துவத்தை நிலைநிறுத்தி
உத்தமரைப் போற்றுகின்ற உயரெண்ணம் எழல்வேண்டும்
சுத்திவரப் பகைவரினும் சோர்ந்துவிடா மனமுடனே
அத்தனையும் தகர்த்தெறியும் ஆற்றலினைப்
பெறல்வேண்டும்
எத்தனைநாள் வாழ்ந்தாலும் அத்தனையும் இப்புவிக்கு
சொத்தாக அமைந்துவிடின் சொர்க்கமாய்
இருக்குமன்றோ !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்