கவிதை

கவிஞர் புகாரி



விதை

உச்சரிக்கும் ஒவ்வொருமுறையுமே
உள்ளக் கிளைகளிலிருந்து
ஆயிரமாயிரம் பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன

உள்ளுக்குள் வாழும் கல்லுக்கும்
சிறகுகள் முளைத்து
உயரே உயரே
எழுந்து எழுந்து பறக்கின்றது

எந்தப் புண்ணியவான் சூட்டியது
இத்தனை அழகுப் பெயரை

கவிதை

உணர்வுகளை
மொழியாய் மொழி பெயர்க்கும்
ஓர் அழியாக் கலை

மொழியின் உயிர்
உயிரின் மொழி

உயிர்த் துடிப்புகளை
அப்படி அப்படியே காலன் தின்னாததாய்ச்
சேமித்து வைக்கும் உயிர்ப் பெட்டகம்

தன்னுள் கிளர்ந்த உணர்வுத் தீயை
துளியும் தணியாமல்
வெள்ளைத் தாள்களில்
பற்றியெரிய வைப்பதெப்படி
என்னும் கடுந்தவிப்பில்
கவிஞன் தன்னையே செதுக்கி
உயிர்ப்பித்த தவம்

சத்திய கவிதைகளில்
சித்தம் நனையும்போது
இளமை துளிர்க்கின்றது
அந்த உயிர் நீடிக்கின்றது

கவிதை

இயந்திரங்கள் மனிதனை இயக்க
பழுதாகும் இன்றைய வாழ்வை
கருணையோடு அள்ளியணைத்துச்
சரிசெய்யும் மருத்துவம்

கற்பனையிலும்
வந்துபோகாத மனித இயல்பைக்
கர்ப்பமாய்ச் சுமந்து
மனித குலத்தின்மீது
மழையாய்ப் பொழிவிக்கும் அக்கறை மேகம்

அதிநுட்ப அறிவியல் விருத்தி
தூரங்களையெல்லாம்
சுருக்கிச் சூறையாடியபோது
கூடவே சுருங்கிப்போன
நம் மனங்களையும்
வாழ்க்கைச் சுவைகளையும்
மலர்த்தித்தரும் சந்தனக் காற்று

இறுக்கத்தின் எண்ணங்களில்
தேங்கித் தேங்கி நிரம்பி வழியும்
விரக்திக் கேள்விகளால்
வெட்டுப்படும் பந்தங்களை
ஒட்டவைக்கும் உயிர்ப் பசை

பொருள்மட்டுமே தேடும் சிறுமை வாழ்வை
ரசித்துச் சுவைத்து வாழும்
அருமை வாழ்வாக்கும் அழகு தேவதை

நாளைகளில் நம்பிக்கை இல்லாக்
கோழைகளாக்கும் இந்த நூற்றாண்டுகளின்
பிரம்மாண்டங்களில்
நால்திசை நாடுகளும்
இடுப்பில் அணுகுண்டுகளைத்
தூக்கி வைத்துக்கொண்டு நிலாச் சோறு ஊட்ட

உலகம்
ஒரு நொடியில் பொடியாகும் அபாயம்
நம் நிழலைக் கிள்ளியெறிந்துவிட்டு
அந்த இடத்தை அபகரித்த
பெருமிதத்தில் மந்தகாசிக்க

விழிகளில் நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப் பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும் அன்புக் கரம்

கவிதை



 

உலக கவிதை தினம் மார்ச் 21

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்