எது கவிதை?
கவிஞர் மாவிலி மைந்தன்
சி.சண்முகராஜா
உள்ளத்திற்
காணு முணர்ச்சிகள் - தேன்
ஊற்னெப் பொங்கி வழிகையில் -அதை
அள்ளி யெடுத்தோர் வடிவிலே – கூடும்
ஆழ்ந்த பொருளினை யேற்றியே - ஓசை
துள்ளி விழும்தமிழ்ச் சொற்களால் - நயம்
தோய்த்து வெளிப்பட வைத்திடிற் - காட்டு
வெள்ளம் கரைபுரண் டோடல்போல் - புது
வீறுடன் தோன்றும் கவிதையே!
சித்தத்தி லுண்மை யொளிதரும் - நல்ல
சிந்தனை யோங்க வழிதரும் - தெய்வ
பக்தி நிலையை வளர்த்திடும் - மாந்தர்
பண்பொ டொழுகப் பயிற்றிடும் - வீர
வித்தினை ஊன்றி விதைத்திடும் - தோற்று
வீழி லெழுந்திட வைத்திடும் - இன்னு
மெத்தனை விந்தைகள் உள்ளதோ – செய்யு
மத்தனை யுன்நற் கவிதையே!
ஆண்டா னடிமை நிலையினைப் - பெண்
ஆணென்ற பேத விதிகளைக் – கால்
பூண்ட அடிமை விலங்கினைக் - கையிற்
போட்ட பழமைத் தழைகளை – வழி
தாண்ட முடியாத் தடைகளைக் - குலத்
தாழ்வினைப் போற்றும் கொடுமையை – யெலாம்
கூண்டோ டுடைத்திடும் வல்லமை – என்றும்
கொள்ளும் புரட்சிக் கவிதையே!
உலக கவிதை தினம் மார்ச் 21
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்