உலகக் கவிதை தினம்

புலவர் முருகேசு மயில்வாகனன்

கொச்சகக் கலிப்பா:

விதைக் கென்றொரு களிப்புக் குரியநாள்
அவிசாகத் தந்ததுவே ஐநா மன்றமே
கவிஞர்கள் தருகின்ற கவிதைகளைப் போhற்றுநாள்
புவியோரே போற்றுடுவீர் புத்தொளிர் கவிதைகளை.

அன்றுதொட்டு இன்றுவரை ஐயந் தெளிந்தெழுதும்
தன்மானக் கவிதைகளே தலைநிமிர்ந்து நிற்குமே
வன்மம் நிறைந்தவைகள் வாழ்வின்றித்; தேய்ந்திடுமே
இன்பம் தருகின்ற ஏற்றமுறு கவிதைபல.

கவிஞன் என்போன் காலத்ததிற் கேற்பவே
தவிக்கின்ற மக்களுக்குத் தருகின்ற கவிதைகளே
செவிக்கின்பம் மட்டுமல்ல செப்புவோர்க்கு நல்லறிவும்
கவிநயமும் ஓசையும் கருப்பொருளும் தந்திடுமே.

நேரிசை வெண்பா:

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உண்மைக் கவிதைகள்
தெள்ளத் தெளிந்தறிவால் தேர்ச்சயுற்றோர் – கள்ளமின்றி
அள்ளி அளித்தார் அரும்பெரும் காவியங்கள்
உள்ளங் குளிரவந்த ஊற்று.

பாவாலே செய்தார்கள் பற்பல நூல்களைத்
தேவாரம் போலத் திருக்குறளும் - ஆவாரம்
சூடினார்கள் பாவலர்கள் சுந்தரச் செந்தமிட்கு
வாடுதல் ஏதுமில்லா வாய்ப்பு.

மாசறு பாவலர்கள் மக்களின் வாழ்வுயரப்
பாசப் பிணைப்பாலே பல்வகை – ஓசைகளில்
காலத்திற் கேற்பவே கண்ட குறைகளை
மூலமாய்க் கொண்டமைத்த பாட்டு.

பாரதியின் பார்வையிலே பாடலிலே மாற்றங்கள்
ஊரதற்கு ஆதரவு உண்மையது – சீரமைந்த
நல்ல புலவர்கள் நன்றாய்ந்து ஏற்றனரே
சொல்லாற்றல் மிக்கவரும் சேர்ந்து.

போட்டி பிறந்தது பேராதர வெங்குமே
பாட்டுக் கொருபுலவன் பாரதியின் - ஊட்டுதலால்
யாருமே பாடலாம் ஞாலமே ஏற்றது
சீருற்ற பாக்கள் சிறப்பு.

சினிமா முதற்கொண்டு சீரமைக்கும் கூத்து
இனிமை பெறுவதற்கு ஏற்ற – புனிதமாம்
பாடல் மரபுவழிப் பாடல்கள் பாட்டிசைக்க
ஆடலும் சேர்ந்திடுமே ஆங்கு.



உலக கவிதை தினம் மார்ச் 21




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்