கவிதை தினம்

கவிஞர் கந்த.ஸ்ரீ பஞ்சநாதன்

கிலத்தில் பற்பல மொழிகள் இருந்திடினும்
       அவற்றுள் இலக்கணம் விரிவாத்த ருவதுதமிழ்
அகம்புறமும் பழமையும் பண்பும் பயனுமாக
       அழகாய் இயல்பாய் அமைந்த பக்திமொழி
இகத்தினிலே மானிடர் வாழ்க்கையை நெறிப்படுத்தும்
       இனிமைக் களஞ்சியம் பொதுமறை கொண்டமொழி
மகிமைகொண்ட செய்யுளை எழுதும் வழிமுறையை
       மனிதர்க் குயாப்பாய் அணியாய் தரும்செம்மொழி

மனிதரின் எண்ணம் மழலையாய் உதித்து
       மனத்தில் உணர்வு வெளிப்பட்டுப் பிறந்துமே
கனிவாய்ச் சொற்களும் பொருட்சுவை ஓசையுமாய்
       கற்பனை அநுபவம் கலந்து முக்கனியின்
இனிப்பாய் நோக்கினை யாத்து இன்பமோ
       இன்னலோ இதயத் துடிப்பாய் எழுந்தவண்ணம்
தனித்துவம் நிறைந்து உயிர்ப்பாய்க் கருத்தினை
       தெளிந்த தமிழில் உரைப்பதே கவிதையாம்.

உயர்ந்த கருத்தினை ஊக்குவிக்கும் கோட்பாடு
       உலகக் கவிதைத் தினத்தின் நோக்கமாகும்
வயலில் விளையும் பயிர்போன்று கவிதையினை
       வாசிக்க எழுத கற்பிக்க உதவுதற்கும்
மயங்கும் இளைஞர் உள்ளத்தைச் சீராக்கி
       மனதினையே சமூகத் தேவைக்கு உள்வாங்கி
வியக்கும் கவிதைகள் எழுதும் கவிஞர்கள்
       விரைவில் அங்கீகா ரம்செய்யும் நன்நாளே.

கவிதையின் மூலமாய் கலாச்சார வெளிப்பாடு
       கண்ணான அடையாளம் நாட்டிற்குக் கிடைக்கும்
கவிதையைக் கொண்டாடி கருத்தும் பரிமாறி
       கவிஞர்கள் நாட்டின் பொக்கிசம் எனநம்பி
புவியில் ஒவ்வொரு மக்களும் கவிஞரை
       பார்புகழ விழாக்கள் எடுத்துக் களிப்புற்று
அவனியில் நாங்களும் மரபுவழிப் பாவலரை
      அன்புமழை பொழிந்து வானமாக்கி மகிழ்வோமே.

ஆயிரம் மொழிகள் தோன்றட்டும் உலகினிலே
       ஆதிமொழி தமிழர் பேசுகின்ற தமிழ்மொழியே
பாயிரம் விதைத்தார் அலெஸ்கொலியர் பேரறிஞர்
       பாரினில் முதல்மொழி பைந்தமிழர் தமிழ்மொழியே
காய்மை இன்றி நோக்குங்கள் பாவலரே
       கவிதையை மற்றவர் போற்றிட இயற்றுங்கள்
ஞாயிறு போலவே நீவீரும் பூமியிலே
       சாதனை படைத்து கவிதையை வெளியிடுவோம்


உலக கவிதை தினம் மார்ச் 21
 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்