கவிதை

கவிஞர் ஆ.இராசேந்திரம்

காடுமலை பரந்தவெளி கடுகி ஓடும்
       பேராறு செந்நாய்கள் சிங்கம் வேழம்
ஊடுதிகழ் மணற்பரப்பின் வெம்மை தாண்டி
       உடல்நோக நடையிட்டுப்பக்கல் தோன்றும்
வாடும்நெற் பயிர்நிற்கும் வயல்நி லத்தின்
       வாட்டத்தில் மனம்நொந்து மணம்மி தந்து
நீடுவரும் சந்தனத்தின் கொம்பர் தூங்கும்
       நிறைநறவை எடுப்பதுபோற் கவிதை ஆகும்!

வான்நோக்கும் மலையுச்சி வனப்பை யூட்டி
       வளர்ந்துவரும் பசுஞ்செடிகள் நிலத்தை நோக்கிக்
கானமழை பொழிந்துவரும் நதிகள் ஓரம்
       கவிழ்ந்துதலை சாய்ந்திருக்கும் கதிர்கள் இன்பத்
தேனொழுகப் பேசிவயல் வரம்பு மீது
      தேவிமடி சாய்ந்திருக்கும் தலைவன் நாளும்
மோனதவம் செய்கின்ற முனிவன் காணும்
      ஞானத்தின் முதிர்விவைபோற் கவிதை ஆகும்!

கானகத்து மலர்பறித்துச் சரங்கள் கட்டிக்
       கனியிதழார் கோலமிடும் இனிய வேளை
வானத்தின் உச்சிக்குப் பறந்து சென்று
       வைரமணி விளக்குகளாய் ஒளியை வீசும்
மீனையெல்லாம் நிலவோடு பறித்து மீண்டு
       மின்னலென ஒளிர்பந்தல் முகட்டின் மேலே
மானினத்து விழிமங்கை மணநாளின்கண்
       முத்தென்னப் பதிப்பதுபோற்கவிதை ஆகும்!


உலக கவிதை தினம் மார்ச் 21

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்