காலத்தை வென்ற ஹாக்கிங்!

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா



ற்றபெரு பிணியாக இளமையில் ஏயெல்லெஸ்
        உடலினைக் கட்டிவைக்கச்
சுற்றுகிற நாற்காலிச் சுவருக்குள் நாளெலாம்
        சோர்ந்துடலம் வீழ்ந்திருக்க
முற்றியது வாழ்வென்;று முடங்கிவிட வில்லையவன்
        முத்திரை பதித்துவைத்தான்
கற்றவியல் பியலறிஞன்  ஸ்டீபன்ஹாக்  கிங்என்றும்
        காலத்தை வென்றுநிற்பான்!

ஊனமென உடல்நொந்தும் உருவமது சிதைவுற்றும்
        உள்ளத்தி லுறுதிகொன்டான்
ஏனென்றும் எதற்கென்றும் எவ்வாறும் எனக்கேள்வி
        எழுப்பியே உயர்ந்துநின்றான்
மானிடமும் மண்னுலகும் நீடுநிலை பெற்றுயர
        மாண்பான கொள்கைதந்தான்!
வானின்று விரிந்தபிர பஞ்சத்தி னறிவியலை
        வரலாற்றி லெழுதிவைத்தான்!

இறப்பிற்குப் பின்னேயோர் வாழ்வில்லை இன்றைக்கு
        இருப்பதே வாழ்க்கையெனவும்
இறக்கின்ற வரைமட்டும் பிறக்கின்ற மூச்சோடு
        உலகத்தை ஆள்கயெனவும்
திறக்குமொரு கதவுமுன் பொருகதவு மூடினால்
       திண்ணமாய் நம்புஎனவும்
சிறப்பான பாடமெனத் தான்வாழ்ந்த வாழ்வையெம்
        சிந்தைக்குத் தந்துசென்றான்!


ஏயெல்லெஸ் -  ALS (Amyotrophic Lateral Sclerosis)



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்