மறவாது போற்றும் இம் மண்

கவிஞர் இனியன், கரூர்



பஃறொடை வெண்பா

க்கர நாற்கா லியிலே உறையினும்
மிக்கார் இலைஎன் றறிவியல் கற்றாய்!
முனைவர் எனுமோர் முழுநிறைப் பட்டம்
அனைவரும் போற்றும் அவையிலே பெற்றாய்!
பிறவியில் பெற்றனை ஐம்புலன் ஆனால்
குறைபட் டயர்ந்தன வாயொடு மெய்யும்
கணினி உதவியால் பேசிடக் கற்றாய்!
அழகாய் உரைத்திட ஆற்றலும் பெற்றாய்
முயற்சி திருவினை யானத னாலே
பெயரும் புகழும்நீ பெற்றனைப் பாரில்
கருந்துளை என்னும் கருத்தியல் ஒன்றை
திருத்தமாய்க் கண்டதைத் தந்தனை; அண்டம்
குறித்த அரிய தகவல் அதன்முன்
எவரும் அறிந்திலர் என்னே வியப்பு!
கேம்பிரிட்ஜ் பல்கலை பேரா சிரியர்
பணியில் அமர்ந்து சிகரமும் தொட்டாய்
இறவாத நூல்கள் எழுதிக் குவித்தாய்
மறவாது போற்றும்இம் மண்.


 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்