தாங்கும் இதுநாள் தமிழே

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

காலை அகிலாய்க் கவிதை மனத்தைக்
      கற்ப னைக்குப் பதமாய்
ஓலை விரித்த உறவுப் பாலம்
      உரித்த பஞ்சாய்ப் பறக்கும்
வாலை விரித்த வனிதைக் குரலாய்
      மன்பு கத்தில் இனிக்கும்
வேளை வந்து விரியக் கண்டேன்
      வெற்புக் கவிதை தினமே!

கோலக் குமரி கொஞ்சும் தமிழைக்
கொட்டும் அருவி யாளைக்
காலம் எனக்குத் தந்த மன்றில்
கற்ப னைக்கோ பஞ்சம்?
தூலக் கணப திக்கோர் ஏற்றும்
தீபத் துடனாய்ப் போற்றுஞ்
சோலைக் குள்ளே சிந்துத் தமிழைத்
தோட்டம் வைத்து மகிழ்வேன்!

வஞ்சிக் குடிலை வார்ப்புத் தேனை
மாதாள் தனத்துப் பதிவைத்
தஞ்சம் என்று அடைந்தால் பூமித்
தத்து வங்கள் உயிர்க்கும்
மஞ்சம் விரித்து மடியிற் புதைந்து
வாழுங் கவிதை யார்க்கும்
கொஞ்சும் தமிழைக் கொடியைக் காக்கும்
கொண்ட திருநாள் ஈதாம்!

கவிதை நெஞ்சம் கனதி போகக்
கற்ப னைக்குள் விரியும்
புவியின் போதை முழுக்க முழுக்கப்
புத்த கங்கள் மிதக்கும்
அவியைச் சுரந்து அளக்கும் யாகம்
அற்பு தத்துள் மலியும்
குவியுங் கரங்கள் கூட லாகக்
குருவி யாகுந் தினமே!

கவிதை தினத்தின் கனலை வார்ப்புக்
கச்சி தங்கள் உயிரின்
அவிசு ஆக்கித் தறியின் நூலாய்த்
அகிலம் படைக்க நெய்யும்
துவிசக் கரத்தில் தோன்றும் பொழுது
தேசம் மலரும் பாவைத்
தவசிப் பூக்கள் தரிக்கும் ஊஞ்சல்
தாங்கும் இதுநாள் தமிழே!

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்