பூக்காமற் போகுமோ பூ?
தேசபாரதி தீவகம்
வே.இராசலிங்கம்
காலைக் கதிரோடுங்
காற்றும் மணிநிலமும்
தூலப் புறம்பான தூலிகையும்-காலமது
ஆக்கும் மனக்காயம் ஆறாத மண்ணோடும்
பூக்காமற் போகுமோ பூ!
தேக்கும் முடையாகித் தேராத கல்வியின்
தாக்கம் நிலத்தோடும் சார்ந்துவர-ஆக்கமுடன்
நோக்கம் மலராத நுண்ணறிவு அற்றமிடப்
பூக்காமற் போகுமோ பூ!
வன்முறையிற் கல்வி வதையாகும் போதெங்கள்
பொன்நிலமும் வாடிப் பொடியாகும்-மன்னறிவைக்
காக்குஞ் சிறகாகிக் கற்பம் தரிக்காமல்
பூக்காமற் போகுமோ பூ!
வாதை அரசியலும் வன்மக் கொடியதுமாய்
பேதை துடிக்கும் பொழுதுஇதில்-மேதையெனத்
தீய்க்குள் விரல்வைத்துத் தேசம் அழுக்காகிப்
பூக்காமற் போகுமோ பூ!
போதை புரள்கிறது பெண்ணுங் கருகிவிழ
மீதக் குடில்மண்ணும் வீழ்கிறது-சாதனையின்
தேர்க்கரங்கள் இல்லாமல் துக்கிட்டுத் தார்நிலங்கள்
பூக்காமற் போகுமோ பூ!
நூலின் மதியின்றி நெஞ்சக் கனலின்றி
ஆலின் விருட்சம்போல் ஆகிடுமா?-கோலம்செய்
வாக்கும் மனதோடும் மண்ணின் குரலின்றிப்
பூக்காமற் போகுமோ பூ!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்