பூக்காமற் போகுமோ பூ!

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா
 

காதற் பூ

ண்வழியே வந்தாள் கலந்தாள் உடலெங்கும்
நுண்ணுயிரி யாய்க்காதல் நோய்தந்தாள் - பெண்மயிலாள்
நோக்கும் விழியாலே நோய்க்கும் மருந்தானாற்
பூக்காமற் போகுமோ பூ!

கவிதைப் பூ

றும் உணர்வுகளும் ஓடிவரும் கற்பனையும்
கூறும் மொழியழகும் கொள்ளையிட – வீறுடனே
தூக்கும் அணிநலமாய்த் தோன்றும் கவிதையிலே
பூக்காமற் போகுமோ பூ!

கடமைப் பூ

தாய்நாட்டைத் தாய்மொழியைத் தன்னினத்தைத் தான்மறந்து
நாய்போ லடிமையுறல் நன்றாமோ – ஆய்ந்துணர்ந்து
ஆக்கந் தருஞ்செயல்கள் ஆற்றுவோர் வாழ்வினிலே
பூக்காமற் போகுமோ பூ!

கருணைப் பூ

வாழ்வுரிமை யற்றே வறுமைச் சிறைவீழ்ந்தே
தாழ்வுநிலை யுற்றே தவிப்போரின் - ஊழ்வினையைப்
போக்கவழி காட்டும் பொருள்படைத்தோர் நெஞ்சினிலே
பூக்காமற் போகுமோ பூ!
 



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்