ஸ்டெர்லைட் எனும் கருநாகம்

கவிஞர் புகாரி



த்தினகிரி
மொத்தி அனுப்பும்
குஜராத்
குதறியனுப்பும்
கோவா
மோவாய் பெயர்க்கும்
தமிழ்நாடு மட்டும்
தத்தெடுத்து
உச்சிமுகருமா

தமிழன்
தன் தரங்கெட்டு
அரசியல் அயோக்கியன்
ஆகிவிட்டான்

அதனால்தான்
குரங்குகள் எல்லாம்
தாவிக் குதித்து

நடுவீட்டிலேயே
ஊஞ்சல் கட்டி ஆடுகின்றன

அடுக்களையில்
சிறுநீர் கழிக்கின்றன

படுக்கையறையில்
மலவாய்வு விடுகின்றன

புற்றுநோய் வளர்க்க
தமிழ்மண்ணில்
நாற்றுநடும் தினவை
யார் தந்தார் உங்களுக்கு

இருப்பது
கெடுப்பது போதாதென்று
இன்னொன்றும்
வருகிறதென்றால்
இழிச்சவாயன் தமிழனென்று
எங்கள் நெற்றியில் எழுதி இருப்பதை
நீங்கள் எப்படியோ
வாசிக்கப் பழகிக்கொண்டீர்கள்
என்று அர்த்தமா

அல்லது
நாங்கள் இன்னமும்
யோசிக்கப் பழகவே இல்லை
என்று பொருளா

யோசித்துப்
பொங்கியெழுந்த சிலரையும்
சிறையில் அடைத்தீர்கள்

இப்படிப் பூச்சாண்டி காட்டி
இன்னும் எந்த நஞ்சை
எங்கள் மீது
கக்க இருக்கிறீர்கள்

நாங்கள்
சாதிப்பற்றுச் சோதரர்கள்தாம்
அதைத் தூண்டி
எங்களைப் பிரித்தாளவும்
முடியும்தான்

ஆனால்
அதெல்லாம்
சிறுபொழுதுமாத்திரமே
என்பதை அறிவீர்களா

நீறுபூத்த நெருப்பு
மறத்தமிழன் மார்பு

அது
சிறுமைகண்டு பொங்கும்போது
விம்மித் துடித்தெழும்போது
தடுத்து நிறுத்த இத்தரணியில்
ஒரு சக்தியும் இல்லை

உங்கள் கொட்டங்களை
ஒழித்தழித்து மீட்டெடுப்போம்
தமிழ் மண்ணையும்
தமிழர்தம்
வளமிகு வாழ்வாதாரங்களையும்



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்