சித்திரையாள் வந்தாள்!
கவிஞர் மாவிலி மைந்தன்
சி.சண்முகராஜா, கனடா
பஞ்சணையின்
மெய்யணைப்பிற் பாவையவள் கையணைப்பிற்
துஞ்சுகின்ற வேளையிலே துளிர்த்தவிளங் காலையிலே!
நித்திரையுங் கலைந்துவர நினைவுகளும் மீண்டுவரச்
சித்திரையா ளங்குவந்தாள் சிந்தனையைத் தூண்டிவிட்டாள்!
எத்தனையோ பணியிருக்க ஏற்பதற்குத் துணிவிருக்க
மெத்தனமாய் வாழ்வதுமேன் மெய்மறந்து தூங்குவதேன்?
புத்தாண்டில் நானுமொரு புதுநிலவாய் வந்தாலும்
பித்தாகி மானிடர்கள் பிறைநிலவாய்த் தேய்வதென்ன?
மனிதரெனப் பிறப்பெடுத்தோர் மாக்களாய் உருவெடுத்துப்
புனிதமெனக் கிடந்தவிந்தப் பூனிலத்தைக் கெடுத்ததென்ன?
மானுடத்தின் வேரறுக்கும் மடமையினைச் சாடாயோ
கூனடைந்த கொடுங்கோலர் குடைசாயப் பாடாயோ?
மதத்தாலே மதங்கொண்டு மானிடத்தைக் கொய்பவரை
வதத்தாலே பலிகொள்ள வல்லவனைக் கேளாயோ?
தரணியிலே தர்மநெறி தழைத்தோங்கப் பாராயோ
பரணியொன்று பாடிவரப் படையொன்று சேராயோ?
தூக்கத்தைப் போக்கிவிட்டுத் துணிந்தெழநீ வேண்டாமோ
ஆக்கமுள்ள அறிவியலில் அகம்பதிக்கக் கூடாதோ?
என்றுபல கேட்டுவைத்தாள் எண்ணத்தைத் தூண்டிவிட்டாள்
சென்றுவர விடைகேட்டே சித்திரையாள் சென்றுவிட்டாள்!
சித்திரையா ளேற்றிவைத்த சிந்தனையை நெஞ்சிலிட்டால்
இத்தரையை மாற்றிடலாம் இன்பமுற வாழ்ந்திடலாம்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்