சித்திரை வந்தாள்..

அருட்கவி ஞானகணேசன்


கும்மி

சித்திரைப் பெண்ணவள் சீரொடு வந்தாளே
         சித்தம் குளிருதே கும்மியடி
நித்திரை செய்யலாம் நிம்மதி ஓங்குமே
         நீலமாய் வானமும் தோற்றிடுமே!

பார்க்கு மிடமெல்லாம் பச்சைத் தரைகளும்
         பற்பல வர்ணத்தில் பூக்களுமே
ஈர்க்குமே எம்மனம் எங்களின் பூங்காக்கு
         எத்தனை வேடிக்கை கண்டிடலாம்

கடற்கரைக் காட்சியால் கண்கள் குளிர்ந்திடும்
         காதலர் கூட்டமும் கூடிடுமே
அடர்மரத் தோப்பிலே ஆண்களும் பெண்களும்
        ஆடுவர் பாடுவர் ஆனந்தமே

கீசுப் பறவைகள் கூட்டமாய் சேர்ந்து
        குடும்ப உறவினைக் காட்டிடுமே
பாச மலர்களாய்ப் பட்சி புறாவினம்
        பற்றொடு கொஞ்சிக் குலாவிடுமே

பட்டையா யாடைகள் போட்டுத் திரிந்தவர்
        பாதியாய் நிர்வாணக் கோலத்திலே
சிட்டுக்கள் போலவே சேட்டைகள் முத்தங்கள்
       சொண்டொடு சொண்டினைச் சேர்த்துவைத்தே!

பட்டதைப் போல்நின்ற பார்மர மெல்லாமே
       பச்சை இலையொடு பூத்தருமே
இட்டமாய்ச் சிட்டுக்கள் ஏற்ற துணையொடு
       எங்கும் பறந்து களிப்புறுமே!

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்