சித்திரைப் பாவையே

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
 

ழையன சென்று புதியன வந்து
அழலவன் மேடத்தில் அன்பாய் - நுழைவது
புத்தாண்டு என்பர் புதுமை விளம்பியே
புத்துயிர் உண்டாக்க வா
சித்திரைப் பாவையே சீரும் சிறப்புமாய்
முத்துக்கள் மின்னும் முழுநிலவாய் - சுத்தமுடன்
பார்க்கின்ற மக்களும் பண்பாய் வரவேற்க
பாரினில் பாங்குடனே வா
பெண்ணின் இலக்கணம் பேர்சொல்ல வந்தவளே
கண்கள் பொழியும் கருணையினால் - எண்ணில்லா
மக்களும் ஏர்பிடித்து மண்ணிலே உய்வதற்கும்
பக்குவமாய் வாழ்வதற்கும் வா
வருகின்ற சித்திரை வற்றா நதியாய்
அருக்கன் ஒளியாய் அளவாய் - பெருமைசேர்
நன்மைகள் தாயகத்தில் நேரிட்டு மக்களின்
துன்பம் துடைக்கவே வா
சித்திரைத் தென்றலும் சிந்தையினைத் தூண்டட்டும்
எத்திசை மானிடரும் ஏற்றமுடன் - புத்தியினால்
காக்கை யினமாக காத்திரமாய் ஒன்றுபட்டு
ஆக்கமுற சித்திரையே வா
ஆய கலைகள் அனைத்தும் அறிந்தவர்
தூய மனத்தால் துயர்போக்க - நேயமே
நல்வழி காட்டுமென்று நாமும் இறைவனை
நல்நாளில் கும்பிட வா





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்