சித்திரை வந்தாள்

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்

லர்ந்ததே சித்திரை மனமகிழ் புத்தாண்டு
மலரெனும் மதிமுகம் மங்கையோ பௌர்ணமி
சிலம்பொலி சிந்திடச் சித்திரை வந்தாள்
கலங்கரை விளக்கெனக் கைகூப்பி நின்றாள்!

இத்தரை மீதினில் சித்திரை வந்தாள்
புத்தகம் போலவே புதுமைகள் தந்தாள்
சித்தியொடு சத்தியருள் சித்திரைத் தாயே
பத்தியோடு பரவசமும் பரிந்தருள் நீயே!

நதியூரும் சோலை மதியூரும் மாலை
கதியின்றிக் கண்ணீரில் கையேந்தும் ஏழை
புதிதாகப் புலர்கின்ற சித்திரைப் புத்தாண்டே
அதிகார அதர்மத்தை அடியோடு அழிதாயே!

சதிவலையை வீசுகிறார் சண்டாளர் மண்ணில்
அதிபெரிய பணமுதலை அரசாள எண்ணி
இதுதகுமோ இதுமுறையோ ஏனிந்தக் கொடுமை
புதுவளிகள் புதுநெறிகள் பரிந்தருள்வாய் புத்தாண்டே!

கண்ணீரும் கரைந்தே கவலை ஆறாச்சே
மண்மீதில் மனச்சாட்சி மதிப்பின்றிப் போச்சே
தண்ணீரைத் தடுக்கின்ற தாங்கோணாக் கொடுமை
புண்ணியம் எதுவென்று பகருவாய் புத்தாண்டே!

எரியுதே நாடுகள் ஏனிந்தக் கேடுகள்
புரியாத பாலரும் புளுவாகத் துடிக்கிறார்
நரியாக வாழ்கிறார் நடமாடும் பேய்களும்
சிரியடா சித்திரைப் புத்தாண்டு மலரவே!




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்