காவேரி வீடுவருங் காண்!
கவிஞர் மாவிலி மைந்தன்
சி.சண்முகராஜா, கனடா
(நேரிசை
வெண்பா)
நீர்வேண்டி யாசிக்கும் நிர்க்கதியில் மக்களெனிற்
பார்போற்றும் நாடாமோ பாரதமே – ஊர்கூடி
நீவேறு நான்வேறென் றில்லாது போரிட்டாற்
காவேரி வீடுவருங் காண்!
(பஃறொடை வெண்பா)
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமாய் முன்னாளிற்
சீர்பெற் றுயர்ந்த செந்தமிழர் நாட்டிற்
பயிர்வளர்க்கும் வாழ்நிலங்கள் பாழ்நிலங்க ளாகி,
உயிர்காக்கும் ஏழை உழவோர் வயிராற
உண்ணுதற்கு மின்றி உறங்க வழியின்றிக்
கண்ணெதிரே செத்துவிழல் கண்டாலும் கண்மூடிக்
கொண்டிருந்து ஆள்வோர்தம் கோட்டைக் கதவுகளைத்
தட்டித் திறக்கத் தமிழர்நாம் வேற்றுமையை
வெட்டி யெறிந்துவிட்டு வெற்றிபெற ஓர்குடைக்கீழ்ச்
சாவே வரினுமுளம் சோராமற் போரிட்டாற்
காவேரி வீடுவருங் காண்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்