காவேரி
வீடுவருங் காண்!
தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
சாவோலை
கூறிச் சனங்கள் மடிகையிலே
பூவோலை யாமோடா இந்தியா-நாவோடும்
பாவோலை பாடிப் பரவிவரும் செம்மொழிக்காய்க்
காவேரி வீடுவருங் காண்!
இந்தியா ஏகவொரு நாடாய் இனியில்லாச்
சிந்திவிடும் துண்டுகளாய்ப் போவதுவோ-சிந்துதரும்
காவோடும் பண்தமிழின் காவை அழிக்காமல்
காவேரி வீடுவருங் காண்!
சருகு நொருக்குண்ட சார்பாகிக் குப்பை
உருவம் பலதாகி உக்கிப்-பிரிந்தாடி
நோவோடும் இந்தியா நூலாகிப் போகாமல்
காவேரி வீடுவருங் காண்!
ஒருநாடு இந்தியா என்றே இருக்கும்
மருதை உடைந்து மறுவாய்ப்-பெருமையொடும்
தேவாரம் ஆன்மத் திருத்தாங்கம் சேர்ந்துவரக்
காவேரி வீடுவருங் காண்!
ஆறாண்டு நீரில்லா அற்பக் கருநாடாய்
கூறாண்டு வைத்துக் கொடுக்காமல்-பாறாண்டுக்
கோவார் கழுதையென கொள்ளவர சாள்வதுவோ
காவேரி வீடுவருங் காண்!
காவேரி நீரோடிக் கனத்ததமி ழாடுகையில்
தேவேந் திரமாகிச் செம்மொழியாய்-நாவேறும்
கோவேந்தல் இந்தியாக் கொள்ளேடு பிய்க்காமல்
காவேரி வீடுவருங் காண்!
தர்மம் தலைகாக்கும் கர்நாட கத்தோடும்
வர்மம் மிகையாகி மார்தட்டித்-துர்ஆகிச்
சாவேடு மீட்டிச் சரிதையாய் ஆக்காமல்
காவேரி வீடுவருங் காண்!
ஒற்றுமை காத்திட இந்தியா வல்லதொரு
மற்புத் திறனாகி வையத்தில்-பற்றுமொரு
தேவேந் திரமென்கும் தேர்நாடு சாய்க்காமல்
காவேரி வீடுவருங் காண்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்