காவேரி வீடுவரும் காண்

கவிஞர் இனியன், கரூர்



பூவேறி வந்த புதுப்புனல் இல்லாமல்
காவேரி இன்றைக்குக் காய்ந்து கிடந்தாலும்
பாவேறி நானின்று பாங்கின் அறம்பாட
காவேரி வீடுவரும் காண்.

கோள்நிலை மாறினும் கோலங்கள் மாறாமல்
தாள்கொண் டலையும் தடந்தோள் அணங்கெனது
நாவேறி பாஆவாள் நற்றமிழில்; நாளைக்கே
காவேரி வீடுவரும் காண்.

பங்காளி சண்டையால் பாழாகும் நாடெனவே
இங்கினி வன்முறை இம்மியும் வேண்டாமே
சாவேறிப் போகாமல் சங்கடங்கள் இல்லாமல்
காவேரி வீடுவரும் காண்.

ஒருதாய் வயிற்றில் உதித்தவர் நாம்ஆம்
ஒருவுக இன்றே ஒறுக்கும் வெறுப்பினை
நீவேறு நான்வேறு போன்ற நினைப்பொழித்தால்
காவேரி வீடுவரும் காண்.

நதிகள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்கி
விதிகள் சமைத்து விரைவில் இணைத்திடின்
சாவேதும் இல்லா சமுதாயம் ஓங்கிட
காவேரி வீடுவரும் காண்.


 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்