பாவேந்தர் பாரதிதாசன்
புலவர் முருகேசு மயில்வாகனன்
பாரதிக்குத்
தாசனாகப் பாச முள்ள
பண்பாளன் பார்போற்றும் சிந்தனை யாளன்
சீரறிந்த செம்மையாளர் சேவை நோக்கர்
சீர்திருத்தக் கருத்துகளைச் செப்பினார் கவிதையாய்க்
கூரறிவின் சிறப்பினைக் கூர்ந்து பார்த்தால்
குழந்தைமுதல் பெண்ணுரிமைக் காகப் பேசும்
வேரறிந்த வேந்தனவர் விண்ணி லுள்ளார்
விளங்கிடுவீர் அவர்கவிதை வேட்பாய்த் தானே.
பாண்டிசேரிப் பாலகனாய் வந்தெ மக்குப்
பாட்டெளுதி மகிழ்வித்த பாரதி தாசன்
கண்டற் கரியநற் கவிஞ னாக
காலத்திற் கேற்பநற் கவிதை தந்தே
தீண்டாமை ஒழிப்புக்குத் தீர்வு காணத்
தீங்கில்லா வழிமுறைகள் தந்து சென்றார்
தூண்டாமணி யாகவே துணையாய்ப் பெரியார்
தப்பில்லாக் கொள்கைகளின் தனய னாமே.
நல்லாசிரி யராகவே நாடு போற்ற
நாடினார் மாணவரை நயந்து பேசி
உல்லாச வாழ்வையே உதறி விட்டு
ஊருக்கு வேண்டுவதை உணர்ந்து செய்வர்
அல்ல ல்கள் கண்டஞ்சா அற்புத மனிதர்
ஆனந்த மாகவே ஆற்றினார் தம்பணி
சொல்லாற்றல் மிக்கதந்த சோதி மணியோ
சோர்வின்றி மக்கட்காய்ச் செயற் பட்டாரே.
தமிழெங்கள் உயிரென்றே சாதனை செய்த
சத்திய வானவர் சற்று மஞ்சா8
அமிழ்தமொழி பேசியே ஆனந்தங் கண்டார்
ஐயமுறப் பேசுவோரை அறிவாள் கொண்டே
இம்மியுமே அஞ்சாதே எதிர்த்து நிற்பார்
ஏறுபோல் கெம்பியெழுந்தே மோதி டுவார்
திமிரறியாப் பேராசான் சேர்ந்தோர்க் கெல்லாம்
செம்மொழிச் சிறப்பினைச் செப்பி மகிழ்வரே.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்