மொழிக்கு முகவரி தந்தவன்!

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

புதுவையிற் பிறந்த புலரொளிக் கதிரோன்
       புரட்சியைப் பூமியில் விதைக்க,
மதுதரும் மலர்போல் மனங்கவர் மொழியில்
       மரபுடன் கவிதைகள் செய்தான்!
புதுமையைப் புகுத்திப் பழமையைக் கழித்துப்
      புதியதோர் நெறியினிற் சென்றே
இதுவெலோ சிறந்த தெனப்பலர் போற்றும்
      இலக்கியம் படைத்தபா வேந்தன்!

வாழ்விழந் தோரும் மகளிரும் குடும்ப
       வழக்கெனும் அடிமையின் குழியுள்
வீழ்ந்திடும் விதியை விலக்கிடத் துணிந்தான்
      விடுதலைச் சங்கினை ஒலித்தான்!
ஆழ்நிலம் பரந்த ஆணிவே ரன்ன
      அர்த்தமில் சடங்குசாத் திரத்தைச்
சூழ்ந்தெரி நெருப்பாம் கவிதைக ளாலே
       சுட்டவன் பாரதி தாசன்!

பரம்பொருள் வழியைப் பற்றிய நெஞ்சில்
      பகுத்தறி வெனும்நெறி பதித்தான்!
உரம்தரும் கருத்தால் உணர்ச்சியின் கொதிப்பால்
       உண்மையின் கதவினைத் திறந்தான்!
தரமிழந் திருந்த தமிழினம் மீண்டும்
       தலைநிமிர்ந் தெழுந்திட வைத்தான்!
முரசொலி யெனவே முழங்கிய கவிஞன்
      மொழிக்கொரு முகவரி தந்தான்!



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்