பாவும் பாவையும் பேசும் பாரதிதாசன் காவியம்

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

வானக் கார்முகில் வந்து மழையென
       வண்ணப் பெருநிலம் வாருகையில்-துன்ப
ஈனப் பசியொடும் ஏர்நிலங் காய்ந்திடும்
       இன்னற் பொழுதது ஓடுகையில்-கண்ணில்
மானக் குறியிடும் மாட்சிமை யும்பயிர்
       வாட்டும் நிலையது மாறுகையில்-அன்புக்
கானக் குயில்வனக் கஞ்ச நிலத்தொடும்
       கன்னற் புகழ்நிலம் மீண்டுவரும்!

உள்ளும் இனக்கடல் ஒட்டும் அழுக்கெனும்
       இன்னாப் பேய்முகம் ஓடிவிடும்-ஆங்கு
விள்ளுங் கவியினில் வீரத் திருமுகம்
       விஞ்சும் புரட்சியின் வேர்விளையும்-குத்தும்
முள்ளை அகழ்ந்திடும் பூமிப் புலவனின்
       வேதம் புதியதாய்ப் பிறந்துவரும்-கைம்மை
சொல்லும் மங்கையர் சூடுந் திருமணம்
       துன்பக் கனவினைக் தொலைத்துவிடும்!

தோப்பின் கருக்கலிற் தோகைக் கைம்மகள்
       தேகத் தொடும்உடல் சேர்ந்தானை-தமிழ்
வார்ப்புத் திரனெனும் மாறன் மறுமண
       வஞ்சி மகளொடும் மகிழ்ந்தானைப்-பேதைக்
காப்புக் கெனஅவள் கஞ்ச வதுவையின்
       கன்னற் பதுமையைக் கண்டானை-காதல்
ஈர்ப்புக் குள்வரும் பாரதி தாசனின்
       இலட்சி யத்துநாம் போற்றுதுமே!

பிஞ்சுப் பாலகர் பூக்கும் திருமணம்
       பேத லைத்திடப் போகாதோ-அவர்
மஞ்சு வெடித்தவர் போல அலறிடும்
       வாட்டுங் கழிவினை யாகாதோ?-மூட
நஞ்சு பருகிய நாயாய்ப் பதறிடும்
       நத்தும் வாழ்வெனக் கூறாதோ?-அட
தஞ்சம் ஒருநிலைச் சாபம் புரள்வதைத்;
       தார ணிக்கெலாம் பேசாதோ?

கவிஞன் அரசியைக் காத லித்திடும்
       கர்வம் தமிழுக்கு உண்டுகண்டீர்-எவரும்
புவியை ஆண்டிடப் போதம் படைத்திடும்
       புத்தி ரராமொடும் நீதியுண்டாம்-தெய்வ
அவியின் வேள்வியில் ஆன்மத் தோடுயர்
       அள்ளும் புலவனின் அறம்பாயும்-தமிழ்க்
குவியம் பாரதி தாசன் புரட்சியின்
       குலவும் பாவிடுங் கோலமம்மா!





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்