பாவேந்தர் பாரதிதாசன்ஷ

கவிஞர் அனலை ஆ.இராசேந்திரம்



சிங்கத்தின் வாய்வரும் கர்ச்சனையைப் - புலி
     சினந்துசெயும் பெரும் சீற்றத்தினைச்
சங்கத்தமிழ்ச் சொல்லிற் பெய்தவன் யார்? – அவன்
     புதுவைநகர்க் கவிக் கோமகனோ!
எங்கிருந்தோ வந்த ஆரியரோ – எம
     தாருயிர் நாட்டினை ஆள்வதெனப்
பொங்குமுணர்வு ததும்பிக் கிழங்களும்
     பொல்லெடுக்கும் விதம் பாடிநின்றான்!

காட்டுக் கிளியினைக் கூட்டி லடைத்தவன்
     வாட்டிடும் தன்மையைப் போற்புவியில்
நாட்டின் புதல்வரை நச்சு மதியினர்
     ஆள்வது கண்டு வெகுண்டெழுந்து
பாட்டெனும் வேட்டினாற் கேட்டை உடைத்தவன்
     பைந்த மிழ்ப்பா வேந்த னன்றோ!
கேட்பின் அவன்கவி சிந்தை கிளர்வுறும்
     கீழ்மை அகன்றிடும் வீரம்வரும்!

சிந்தனை மெய்ப்பொருள் சீரிய பண்புகள்
     கொண்டு சிறந்த இனத்தவர்காள்
மந்தமதி உமக்கேனெனக் கேட்டுமே
     மாமழையென்னச் சரம் தொடுத்தோன்
நொந்து சிதைந்து கழிந்திடும் எம்மவர்
     நோக்குக் குயிர் கொடுத்தோன்
வந்தனன் பாரதி தாசப் பெரங்கவி
     வையத் தமிழர்கள் சீருறவோ!

வானில் எழுந்த இடிமுழக்கம் - தமிழ்
     வாழ்வை உணர்த்தும் திருவிளக்கம்
கூனல் விழுந்தவர்க் கூன்றுதடி – உயிர்
     கொள்கைச் சுரங்கத்தின் வாயிற்படி
ஈனத் தனங்கட்டு வாட்படையாம் - அது
     எங்கும் நிறைந்டத கூர்வேற் படையாம்
ஊனிற் கலந்தநம் பாவேந் தர்கவி
     ஊழிபல் லூழியாய் வாழும் புவி!




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்