புரட்சிக் கவிஞர்
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
சுப்பு
ரத்தினப் பெயரினை
சுந்தரப் பாரதி தாசனாய் மாற்றியே
நம்ம பாரதி சீடனாய்
நானிலம் போற்றிடும் பெரியார் தொண்டனாய்
தப்பு என்றால் தயங்கார்
தட்டிக் கேட்கும் மனதினைக் கொண்டோன்
வெப்பம் கொண்ட வேங்கையாய்
வெகுண்டு புரட்சிக் கவிதைகள் படைத்தோன்
எண்ணம் முழுவதும் தமிழ்மொழி
எழுச்சிப் பாவினம் எழுந்து மலரும்
கண்ணாய் தமிழரைக் காக்கவே
கருத்தினைப் பதிப்பார் காந்தச் சொற்களால்
திண்ணமாய் அறிஞர் அண்ணா
தீட்டினார் புரட்சிக் கவிஞர் பட்டம்
அண்ணல் தாசனும் தமிழினை
அமுதென் றும்உயி ரென்றும் பாடினார்
முத்தமிழ் வேந்தன் என்றும்
முக்கனிக் கற்பனை ஊற்றாய் திகழ்தவர்
அத்தனைப் பாடலும் தேன்சுவை
அமிர்தமாய் அழகு தமிழினில் தந்தவர்
சுத்தமாய் சாதிப் பிரிவினைச்
சாக்கடை அழிய வேண்டு மென்பார்
வித்தகர் தமிழர் தமிழரை
விரைந்து ஆள விரும்பிய மனத்தோன்
வானம் உயர்ந்து வாழ்ந்தோன்
வாழ்கையில் அரசியல் நேர்மையாய் புரிந்தோன்
மானமாய் வாழச் சொன்ன
மாண்பு மிகுந்த உன்னதக் கருத்தினை
தேனைப் போன்று சுவைத்து
தெளிவாய் நாமும் கடைப்பிடித் துஒன்றாய்
வீனாய் பேசா துசெயலில்
வல்லமை கொண்டு தரணியை ஆள்வோமே
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்