“மே திருநாள்”
புலவர் முருகேசு மயில்வாகனன்
மாதந்தான்
“மே”யென்றால் மகிழ்ச்சிக்கு உரியதன்றோ
சீதமொளிர் மாதமிது சிந்தனைக்கு உரியதன்றோ
வேதனைகள் ஓங்கிடவே விடுதலை வேண்டிநின்றார்
சாதனை யாளராகச் சாதித்தார் தொழில்மூலம்.
போராட்டம் தந்தவெற்றி பெருமைக்கு உரியனவே
ஊராரே முன்வந்து உறுதுணையாய் நின்றதனால்
ஈராறு மணித்தியாலம் ஏற்புடைத் தல்லவென்றே
பேராத ரவோடு பெற்றிட்டார் எட்டுமணி.
வெற்றிபெற்ற திருநாளைப் பெருமையுடன் கொண்டாட
உற்றுணர்ந்தே தேர்ந்திட்டார் ஊற ற்ற “மே”டேயாய்ப்
பற்றுடனே தொழிலாளர் பங்குபற்றி மகிழ்ச்சியுறு
நற்றிருநாள் இந்நாளே நானிலத் திருநாளாம்.
வாக்குவங்கி நோக்கமாக வலிந்தேற்கும் கட்சிகளும்
தாக்கத்தை உண்டாக்கித் தவறுகள் செய்கிறார்கள்
ஊக்கமுடைத் தொழிலாளர் உண்மைநிலை தெரிந்துகொண்டே
ஏக்கமின்றித் தம்கையில் ஏற்றதனை நடத்தவேண்டும்.
அரசிய லாக்கியே ஆனந்தங் கொள்கின்ற
பரம விரோதிகள் பாராள் தலைவர்கள்
உரம்சேர்க்கும் தொழிலாளர் ஊர்காக்கும் தலைமையை
சிரம மின்றிப் பெற்றிட்டால் சீரான ஆட்சிகாண்பர்.
உழைக்கும் கரங்களே உண்மைத் தொழிலாளி
தளர்வின்றி வாழவைப்பர் தம்நாட்டை மட்டுமல்ல
களையெடுப்பர் ஊழல்களைக் காலந் தவறாதே
தளர்விலா ஆட்சியையும் தக்கவைப்பர் தாமுணர்ந்தே.
ஒற்றுமை ஓங்கிடில் ஊடுருவல் அற்றிடுமே
பற்றான சமுதாயம் பாரெங்கும் மிளிர்ந்திடுமே
தற்பெருமை அற்றவர்கள் தலைவர்கள் ஆகிவிட்டால்
கற்கைநெறி தந்திடுமே களிப்பான கூட்டுறவே.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்