நாட்டின் செழிப்பு – மக்களின் உழைப்பு

கவிஞர் புதுவைக் கிருஷ்ணா
 

ப்புக்குக் கூட பெறாத வாழ்க்கையாகிவிட்டது
ஒப்புக்குக் கூட யாரும் அழைப்பதில்லை
அவமானப்படாத நாட்கள் வெகுமானங்களாகின்றன
உழைப்பாளிகள் நாட்டின் முதுகெலும்புகள் - இவர்கள்
கனவுகளில் கூட முதலாளியாவதில்லை
வெப்பத்தில் உழைத்து உழைத்தே கதிரவன் போல் கனலாய்
மாறியதால் அவர் நிழல் கூட இலையைச் சருகாக்குகிறது
நிலைத்திருக்கும் எதுவும் நிலையாய் இருப்பதில்லை
இயங்கிக் கொண்டிருப்பவை மட்டுமே நிலைத்து நிற்கின்றன.
என்னும் வாய்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள்
உழைப்பின் வலிமையை உலகுக்கு உணர்த்தியவர்கள்
உழைப்பில்லாமல் மூச்சுக்காற்றுகூட மூக்கில் நுழைவதில்லை
இதயம்வரை மூச்சை இழுப்போர்க்கு
என்றுமே இதயம் வலித்ததில்லை
உழைக்காது கொழுத்த பெருத்த மனிதர்களைவிட
உழைத்துத் தேய்ந்த செருப்புக்களுக்கே மதிப்பு அதிகம்
தெரிந்தும் தெரியாமலும் ஒவ்வொரு படைப்பின் பின்னும்
இழைந்தே இருக்கிறது உழைப்பின் அருமை
காலத்தை விஞ்சி நிற்கும் பாலங்கள் உழைப்பின் வல்லமையைச் சொல்லும்
விண்ணைத் தொட்டு விடும் கோயில்கள் உழைப்பின் உயரத்தைச் சொல்லும்
ஆறு வழிப்பாதையின் அழகு உழைப்பின் அருமையைச் சொல்லும்
வானைக் கிழித்துச் செல்லும் ராக்கெட்டுக்களாயினும்
தேனை எடுத்துக் கொடுக்கும் குறவர்களாயினும்
எல்லோரும் எப்படியோ யாருக்காகவோ
உழைத்து உழைத்தே தங்கள் கரங்களையும் கால்களையும்
புண்ணாக்கிக் கொள்கின்றனர்.
உழைப்பின் ஒலி தான் வானொலியில் பேச்சாகிறது.
உழைப்பின் ஒளிதான் திரையில் காட்சியாகிறது.
நடிகர்கள் நட்சத்திரங்களாய் ஆவதும்
கோள்களில் நீருண்டா என ஆய்வதும்
திரையில் வராத உழைப்பாளிகளின் உழைப்பால்தான்.
தன்னை மறைத்துகொண்டு இருக்கும் வேர்களின் வலிமை
எப்போதும் மறைத்துவைக்கப்பட்டே இருக்கிறது.
வேர்களின் மகிழ்ச்சி பூத்துக்கிடக்கும் பூக்களில்
பசிக்குக் கொடுக்கும் கனிகளில் தெரியும்
உழைப்பின் அருமை உணர்ந்து வாழ்வோம்
உழைப்போர் பெருமை வணங்கி வாழ்வோம்




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்