என்னை நானறிதல் நானாவேன்!

இராஜ.தியாகராஜன்

நானிங்கே என்னுளத்தில் நானென்று நம்புதலோ,
நானாரென் றுன்னுள்ளே நானென்று நம்புதலோ,
நானிங்கு நானிலத்தில் நானாமோ? நீயுணர்ந்த
நானதுவை என்னுள்ளே நானறிதல் நானாவேன்!
நாடோறும் என்னுள்ளே நானறிதல் நானாவேன்!

நாடியவர் நாளும் நலுங்காமற் றேடுகையில்
மூடியதைத் தாந்திறந்து முற்று முணர்கையிலே
தேடுபவ ரீதென்று தேடாத தன்மையிது;
கூடியவர் தேடுங் குவலயத்தி னுண்மையிது!
குன்றாத புகழுடைத்த குவலயத்தி னுண்மையிது!

கண்கட்டு வித்தையெனக் கண்டவர்கள் பூமியிலே
சுண்ணாம்பாய் வெண்சங்கு சூளையிலே சுட்டதுபோல்
மண்சட்டிச் செந்தீயின் மாறிநிறம் பட்டதுபோல்
எண்ணு முணர்வுகளா லேற்றநிலை கொள்வாரே!
இப்புவனந் தான்போற்றும் ஏற்றநிலை கொள்வாரே!

தளிர்க்குமோ ருண்மை தரணியிலே சொல்வேன்;
துளிர்ப்பினடி வேரென்னுந் சோதியிலே தோய்ந்து
களிப்பவர்கள் கண்டு களிக்கின்ற வெள்ளம்,
தெளிந்தநறு மன்பினையே தேடிமனந் துள்ளும்;
தெவிட்டாத தீஞ்சுவையைத் தேடிமனந் துள்ளும்!

 

thiagaraj@dataone.in