பூக்காடே
வாபக்கம் பூத்து
புலவர் முருகேசு மயில்வாகனன்
ஊக்கம்
உயர்வுதரும் உண்மை அறிந்தவரே
தாக்கமுறு மக்களைத் தாங்கிநிற்க – ஏக்கமின்றிச்
சீக்கிரமாய்ச் சிந்தித்தே சீரான வாழ்வுதரப்
பூக்காடே வாபக்கம் பூத்து.
வாழ்விழந்த
மக்களின் வாழ்வுயர, உன்பங்கை
ஆழ்ந்தறிந்தே தந்து அவர்களின் - வாழ்வதனைத்
தாக்கமின்றி மேலோங்கத் தக்கன செய்வதற்காய்ப்
பூக்காடே வாபக்கம் பூத்து.
போரில்
இழந்திட்டோம் பொன்பொருள் வீடுவாசல்
வேரிழந்த எம்மோர் வெறுங்கையர் – தாக்கியோரைச்
சீக்கிரமாய்க் கண்டறிந்தே தீர்வொன்றைக் காண்பதற்காய்ப்
பூக்காடே வாபக்கம் பூத்து.
ஏக்கமுடன்
வாழ்கின்றார் எத்தனைபேர் தாயகத்தில்
தாக்கமின்றி வாழவைக்கத் தாமுணர்ந்தே – ஊக்கமுடன்
சீக்கிரமே சிந்தித்துச் செய்பணியைச் செய்வதற்குப்
பூக்காடே வாபக்கம் பூத்து.
தாக்கி
அழித்தோர் தயங்காதே ஆழுகிறார்
தாக்குப் பிடித்த தமிழர்கள் – தாக்குண்டே
ஏக்கமுடன் வாழ்கின்றார் என்றுமே காக்கத்தான்
பூக்காடே வாபக்கம் பூத்து.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்