இருகை
கூப்பிக் கேட்கின்றோம்
அருள்மணி சபா. அருள்சுப்பிரமணியம்
அள்ளி
வீசிய குண்டுகளால்
ஆயிர மாயிர மாய்மடிந்த
முள்ளி வாய்க்கால் அவலத்தை
முட்டி மோதும் கருப்பொருளாய்க்;
கொள்ள வேண்டாம் உறவுகளே!
கொச்சைப் படுத்தி எம்மினத்தை
எள்ளி நகைக்க வைக்காதீர்கள்!
இருகை கூப்பிக் கேட்கின்றோம்!!
நச்சுக் குண்டைப் போட்டவனும்,
நரபலி யெடுத்த அயலவனும்,
அச்ச மின்றி எம்மினத்தை
அழித்த கோடரிக் காம்புகளும்,
உச்சிச் செய்மதி ஊடாக
உண்மை அறிந்து இருந்தவனும்,
மெச்சி மகிழ வேண்டுமென்றா
மீண்டும் பிரிந்து நலிகின்றோம்?
விட்டுக் கொடுக்க மனமில்லை!
வீம்புப் பேச்சிற் குறைவில்லை!!
கொட்ட மடித்து உடன்பிறப்பைக்
கொச்சைப் படுத்தி வசைபாடும்
கெட்ட மதியேன் மாறவில்லை?
கேவல புத்தியேன் போகவில்லை?
பட்டும் அறிவு பெறாவிட்டால்
பாதகம் யார்க்கு நமக்கன்றோ!
‘எத்தனை சோதனை வந்தாலும்
இவர்கள் திருந்தார்’ எனக்கூறி
மொத்த உலகும் எமைப்பார்த்து
முணுமுணுக் கிறது தெரிகிறதா…?
செத்து மடிந்த உறவுகளின்
தியாகம் தன்னை மதிப்பதெனில்
ஒத்த கருத்தை உருவாக்கி
ஒற்றுமைப் பட்டுச் செயற்படுவோம்!
நாக்கில் மட்டும் ஒற்றுமையா?
நடையில் மட்டும் வேற்றுமையா?
தீக்குள் இருந்து துடிப்பவர்போல்
சேர்ந்த உறவுகள் ஈழத்தில்
போக்கில் லாமல் தவிக்கின்றார்
புலம்பெயர் மண்ணில் வாழும்நாம்
யார்க்குத் தலையில் முடிசூட்ட
நமக்குள் நாமே மோதுகின்றோம்?
‘புலத்தில் இருக்கும் தமிழர்கள்
புதுவாழ் வளிப்பர்’ எனநம்பி
நிலத்தில் அசையா நம்பிக்கை
நெஞ்சிற் சுமந்து வாழ்வோரின்
நலத்தில் அக்கறை மெய்யாக
நமக்கு இருக்கு மென்றால்நாம்
“பலத்தைக்” காட்ட முயற்சிக்கும்
பைத்தியச் செயலை நிறுத்திடுவோம்!
எமக்குள் பேசி ஒருமுடிவை
எடுக்கத் தெரியா நாங்கள்போய்
‘எமக்குச் சுதந்திரம் தா’ வென்றால்
எவர்தான் ஏற்பர்… நகையாரோ…?
‘உமக்குள் ஒற்றுமைப் படத்தெரியா
உங்களுக் கெதற்குச் சுதந்திரம்இபோய்
சுமப்பீர் பட்டம் பதவிகளைத்
தூக்கிப் பிடிப்பீர் புதுக்கொடியை!’
உரிமை யோடு உங்களிடம்
ஒன்றை மட்டும் கேட்கின்றோம்!
பெரிய இழப்பைச் சந்தித்தோம்!
பெரிய விலையை நாம்தந்தோம்!!
உரிமைக் காக உயிர்தந்த
உறவுகள் சாந்தி பெறச்செய்வோம்!
அரிய அவர்கள் தியாகத்தை
அவமரி யாதை செய்யாதீர்!!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்