என்னசெய்வது...?

சபா. அருள்சுப்பிரமணியம்.


என்னசெய்வ தென்றெமக்குத் தெரியவில்லையே – எங்கள்
       இனஅழிப்பைத் தடுக்கவழி புரிய வில்லையே
கண்ணைக்காதை முழுஉலகும் பொத்திவிட்டதோ? – பாரில்
       கருணைநீதி நேர்மையெல்லாம் செத்து விட்டதோ?

பத்துநூறு என்றதின்று ஆயிரமாச்சு – வன்னி
        பகலிரவாய் உயிர்பறிக்கும் கொலைக் களமாச்சு
செத்தவீட்டுச் செய்திவரா ஈழவனில்லை – நாங்கள்
       சேர்ந்தெழுப்பும் ஓலமென்ன கேட்க வில்லையா?

சொந்தபந்தம் சாகுதென்று துடிதுடிக்கிறோம் - உலகம்
       சுற்றறிக்கை விட்டுநாளைக் கடத்திச் செல்வதேன்?
வெந்தபுண்ணில் வேல்சொருகும் வார்த்தையெதற்கு - இங்கு
       விடிவுதரும் காரியத்தை விரைந்து ஆற்றுமா?

நித்திரையை நாமிழந்து மாதங்களாச்சு – எங்கள்
       நிம்மதியை நாம்தொலைத்து ஆண்டுக ளாச்சு
இத்தரையில் உரிமைகேட்டு அறுபதாண்டுகள் - நாங்கள்
       எத்தனையை இங்கிழந்து ஏதிலி யானோம்

படையிற் சிறார் சேர்வதாக ஓலமிடுகிறார் - அங்கு
       பாலர்கொல்லப் படுதல்கண்டேன் மௌன மாகினார்
விடைதெரியா திங்குநாங்கள் அலமலக்கிறோம் - எங்கள்
       வேதனைக்கோர் முடிவுகேட்க ஒன்று கூடினோம்

முடிவுஎன்ன என்றுநாங்கள் அங்கலாய்க்கிறோம் - இந்த
       முழுஉலகும் சேர்ந்துதங்கள் பங்கை யாற்றுமா?
விடிவு'தனி நாடு'என்று துணிந்துகூறுமா? – எங்கள்
       விழிகளிலே நம்பிக்கையின் ஒளியை ஏற்றுமா?

   

(905) 479 – 5375