உய்யும்
தமிழினமென்(று) ஓர்!
அகரம் அமுதா
ஈழமா மங்கை எழிலாள்மேற் காதலுற்ற
வேழமே! விட்டில் வெரும்படை -சூழமாத்
தீச்சுடர் நாணுமா? செய்யும் புதுக்கவியால்
வீச்சுடைப் பாமரபு வீழுமா? -மாச்சுதை
பிள்ளைச் சிறுகைக்குப் பேர்ந்திடுமோ? பேச்செனுங்
கிள்ளையது பூசைவரக் கீச்செனுமே! -ஒள்ளொளி
மிக்கதோர் சூரியனை வீழ்த்திட நக்கியுண்ணுங்
குக்கலால் ஆமென்றாற் கொள்வருண்டோ? -பக்கலிற்
காணுங் கனவாற் கதையாமோ? திண்ணைவாழ்
வீணர் உரையால் விளைவதென்ன? -பேணும்
பொருவிற் றமிழ்மேற் பொருதும் வடவர்
திருவில் மொழியாய்ச் சிறியர் -பொருதிடினும்
வெற்றி உனதன்றி வீணர்க் கமையாதே!
சற்றும் எலிப்படைபார்த் தஞ்சுமா -புற்றரவு?
ஆற்றைத் தளைகொள்ள ஆகலாம் வீசுபுயற்
காற்றைத் தளைகொள்ளக் கற்றவர்யார்? -கூற்றிற்கே
நாட்குறித்தாற் கூடி நகையாரோ நானிலத்தார்?
தேட்கொடுக்கிற் கைவைக்கச் சேர்ந்தவர்யார்? -வாட்பிடியை
விட்டு நுனிவாள் விரும்பிப் பிடித்திடுவார்க்(கு)
எட்டுணையும் வெற்றி எழுந்திடுமோ? -முட்ட
வழக்குடையான் நிற்ப வலியானைக் கூடும்
இழுக்குடையார் எங்கும் இருப்பர் -சழக்கடையாய்!
நொச்சியது போய்விடினும் நோவில்லை முல்லையுண்டு
கச்சையது போயினுமென் கைகளுண்டே -அச்சமிலை
தெய்வம் இருக்குதெனத் தேர்ந்து வருங்காலம்
உய்யும் தமிழினமென் றோர்!
|