காயத்ரி மகாதேவன் கவிதைகள்

என் அப்பா மிகவும் நல்லவர்

என் அப்பா மிகவும் நல்லவர்.
சில சமயம் மட்டும்
கோபம் கொள்வார்.
சில கோபங்களில் மட்டும்
புகை இழுப்பார்.
கடுஞ்சொல் அவ்வளவு
வீசமாட்டார்.
கோபத்தின் பொருட்டு
ஒருசில வார்த்தைகள்
மட்டும் வெளியில் வருவதுண்டு.
என் அக்காவிடம் மட்டும்
பேசியதேயில்லை இதுவரை.
எனினும் என் அப்பா மிகவும் நல்லவர்.

சுவர் அழுக்கு துடைக்க அவரின்
கறை படிந்த பனியனை மட்டுமே உபயோகிப்பார்.
அழிக்க முடியாத கறைகளுள் அவர்
துப்பிய வெற்றிலைக் கறைகளும் உண்டு.
மாற்று பனியன் வைத்திருந்ததாய்
எனக்கு நினைவில்லை.
ஆயினும் என் அப்பா மிகவும் நல்லவர்.

என் அம்மாவின் கசிந்த சேலையை
உடனே அப்புறப்படுத்தி விடுவார்.
என்றோ ஒரு வேளை அரிசிச்சோறு இருக்கும் சமயம்
அவர் மட்டும் திடீர் உண்ணா நிலை கொள்வார்.
நாங்கள் சாப்பிடுவதற்கு முன்னமே அவர்
சாப்பிட்டதாய் ஒரு நாளும் இல்லை.
முன்வாசலில் அவர் உறங்கும் கயிற்றுக்கட்டிலில்
எங்களை நெருங்க விட்டதுமில்லை.
அக்குள் கிழிந்த சட்டையும்
அழுக்கு படிந்த வேட்டியுமே
அவரின் மேலாடைகள்.

பளிங்குத் தரையில்
மெத்தை விரிப்பில்
குளிரூட்டிய அறைக்குள்
இன்று நாங்கள் படுத்திருந்தாலும்
இன்றும் அவரின் உறக்கம்
எங்கள் முன்வாசலின் கயிற்றுக் கட்டிலில்தான்.
ஆம், என் அப்பா மிகவும் நல்லவர்.


சர்வர்

எல்லா இலைகளும்
எச்சிலான பிறகுதான்
இவர்களின் இலைகள்
துளிர்கின்றன ...



vishnukumarrm@gmail.com